இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாக்ஸிங்டே டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக லபுசேஸன் 48 ரன்களும், ஹெட் 38 ரன்களும், வேட் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மான் கில் 45 ரன்களும், பண்ட் 29 ரன்களும், விஹாரி 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சதமடித்த கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், அரைசதத்தை நெருங்கிய ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் ரஹானே மேற்கொண்டு 8 ரன்கள் சேர்த்த நிலையில். 112 ரன்களுக்கு ரன்அவுட் ஆனார். அடுத்து களமறங்கிய அஸ்வின் 14 ரன்களும், உமேஷ் யாதவ் 9 ரன்களிலும், அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர். முடிவில் 115 ஓவர்களில் இந்திய அணி 326 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 131 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஜோஸ் பர்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லபுசேஸன் தொடக்க வீரர் வேட்டுடன் ஜோடி சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிக நேரம் நீடிக்காத லபுசேஸன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து ஹெட் 17 ரன்களிலும், கேப்டன் பெயன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 17 ரன்களுடனும், கம்மின்ஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் சிராஜ், யாதவ், பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. நாளை நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி வெற்றி பெற முயற்சிக்கும்.