சர்பிரைஸ் முடிவெடுத்த விராட் கோலி! புரிந்து கொண்டு பதுங்கிய ஆஸ்திரேலியா

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

66 பந்துகளை சந்தித்த தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 8 ரன் எடுத்திருந்த போது, பேட் கம்மின்ஸின் மிக அபாரமான ஷார்ட் பிட்ச் பந்தில், தனது தலையை தற்காத்துக் கொள்ள பந்தை தொட, இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஃபின்ச்சிடம் எளிதாக கேட்ச் ஆனார்.

அதேசமயம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய மாயங்க் அகர்வால், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட் கம்மின்ஸ் ஓவரில், விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 161 பந்தில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும், முதல் ஆட்டத்திலேயே, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அரைசதம் அடித்து அசத்தினார் மாயங்க் அகர்வால்.

இந்தியாவுக்காக, கடந்த 10 ஆண்டுகளில், களமிறங்கிய முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் மாயங்க்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா சதம் அடித்தார். இத்தொடரில், புஜாராவின் இரண்டாவது சதம் இதுவாகும்.

319 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, பேட் கம்மின்ஸ் ஓவரில் போல்டாக, 204 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி ஸ்டார்க் ஓவரில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும், கோலி ஒரு புதிய மெகா சாதனையை இன்று படைத்திருக்கிறார். 82 ரன்னில் அவுட்டானாலும், 82வது ரன்னை அவர் எடுத்த போது, ஒரே ஆண்டில் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.

ஒரே ஆண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்த வீரர்கள்:

1212 கிரீம் ஸ்மித் (2008)
1154 விவ் ரிச்சர்ட்ஸ் (1976)
1138 விராட் கோலி (2018) 
1137 ராகுல் திராவிட் (2002)
1065 மொஹிந்தர் அமர்நாத் (1983)
1061 அலைஸ்டர் குக் (2010)

இதைத் தொடர்ந்து, ரஹானே 34 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். ரோஹித் ஷர்மா 63 ரன்களுடன் களத்தில் இருந்த போதே, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்தார். அப்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்திருந்தது.

பந்து தாறுமாறாக எகிறி வருவதால், அதனைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்களை இன்றே பேட் செய்ய வைத்து, அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கைப்பற்றிவிடலாம் என விராட் கோலி எண்ணினார். இதனால் தான் 7 விக்கெட் விழுந்தவுடனேயே டிக்ளேர் செய்து,  இன்றைய நாள் முடியவிருந்த அரை மணி நேரத்திற்கு முன்பாக ஆஸியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆனால், உஷாரான ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள், மிக நிதானமாக ஆடினர். முழுமையாக 6 ஓவர்கள் விளையாடி, விக்கெட் இழக்காமல் 8 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close