ஹர்திக் பாண்ட்யாவா? ஹனுமா விஹாரியா? 3வது டெஸ்ட்டில் யாருக்கு வாய்ப்பு?

பிட்ச் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது? என்பது குறித்து ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களிடம் கூட தெளிவான புரிதல் இல்லை

1-1 என்ற சமநிலையில் இருந்து முன்னிலை பெறப் பெறப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஏற்பட்டுள்ளது.

அடிலைடில் பேலன்சிங் பவுலிங் யூனிட் கொண்டு, ஆஸ்திரேலியாவை திணறடித்து வென்ற இந்திய அணி, பெர்த்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி பெரும் தோல்வியை சந்தித்தது. ஸ்பின்னர்கள் இல்லாமல் களமிறங்கியதால் தான் இந்தியா தோற்றதாக விமர்சனம் செய்தாலும், கேப்டன் கோலி ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை.

பெர்த் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட Pre-Report-ஐ வைத்து தான் அவர் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்ற முடிவை எடுத்தார். பிட்சில் அவ்வளவு வெடிப்புகள் இருந்தது. ஆனால், இந்திய ஓப்பனர்கள் சொதப்பல், லோ ஆர்டர் சொதப்பல், அஷ்வின் மிஸ்ஸிங் போன்ற காரணிகளால் தோற்க நேரிட்டது.

இந்நிலையில், வரும் 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் தொடங்கவிருக்கிறது. டாப் ஆர்டரை பொறுத்தவரை, லோகேஷ் ராகுல் நிச்சயம் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அவருக்கு பதில், மாயன்க் அகர்வால் விளையாடலாம். அதேசமயம், முரளி விஜய்யின் இடத்தில் மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது.

மிடில் ஆர்டரில் எந்த குழப்பமும் இருக்காது. லோ ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்ப்பது அணிக்கு பலன் தர வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் காயத்தால் ஓய்வில் இருந்த பாண்ட்யா மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். கடந்த வாரம் ரஞ்சிப் போட்டியில் விளையாடிய பாண்ட்யா, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுவும், எதிரணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் அவுட் செய்தது பாண்ட்யா தான்.

ஸோ, அவர் ஃபார்மில் இருப்பது போல் தெரிகிறது. தவிர, பேட்டிங்கிலும் பங்களிப்பு அளிப்பார் என நம்பலாம். ஆனால், பாண்ட்யாவை உள்ளே கொண்டு வந்தால் ஹனுமா விஹாரியை வெளியே உட்கார வைத்தாக வேண்டும். ஹனுமா விஹாரி கூட நன்றாக ஸ்பின் வீசுகிறார். பெர்த்தில் 2 விக்கெட்டுகள் கூட கைப்பற்றினார்.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவெனில், கடந்த ஆண்டு மெல்போர்ன் பிட்ச் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. “Poor” பிட்ச் என விமர்சனம் செய்த ஐசிசி அதன் தரத்தை குறைத்தது. அதன்பிறகு, சுமார் ஒருவருடம் கழித்து, முதன் முதலாக மெல்போர்னில் டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. அதில் தான் இந்தியாவும் – ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன.

எனவே, பிட்ச் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது? என்பது குறித்து ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களிடம் கூட தெளிவான புரிதல் இல்லை. ஆனால், சமீபத்தில் இந்த மைதானத்தில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில், ‘இந்த பிட்ச் கண்டிப்பாக முடிவு தரக் கூடும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், ஸ்பின்னுக்கு சப்போர்ட் செய்யுமா? என்பதைப் பற்றி எதையும் சொல்லவில்லை.

இருப்பினும், வேகப்பந்து வீச்சுக்கே இந்த புதிய பிட்ச் துணை புரியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால்,  பாண்ட்யாவிற்கே முன்னுரிமை கொடுக்கப்படலாம்.

டாப் ஆர்டர்

மாயன்க் அகர்வால் – முரளி விஜய்

மிடில் ஆர்டர்

விராட் கோலி, சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே

லோ ஆர்டர்

ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா/ஹனுமா விஹாரி

ரவிச்சந்திரன் அஷ்வின் கூட லோ ஆர்டர் பேட்ஸ்மேன் கணக்கில் வருவார் என்பதால், மேற்கூறிய 7 பேட்ஸ்மேன்கள் + 3 வேகப்பந்து வீச்சாளர்கள் + 1 ஸ்பின்னர் என்று களமிறங்கினால் மெல்போர்னில் மீண்டும் இந்திய அணியால் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close