ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி இந்தியாவிற்கு எதிராக 5 ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் , இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், அவரது மனைவிக்கு உடல்நலக் குறைவு என்பதால், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விலகுவதாக அறிவித்தார். எனவே, இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் ரகானேவும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

அணியின் ஸ்கோர் 11 ரன்களாக இருந்த நிலையில், ரகானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய விராட் கோலி ரன் ஏதும் ஏடுக்காமல் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். தொடர்ந்து மணிஷ் பாண்டேவும் ரன் எடுக்காமல் வெளியேறவே, இந்திய அணி தடுமாற்றம் கண்டது. 11 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் ஜோடி அணியினை சரிவில் இருந்து சிறிது மீட்டது. எனினும், அணியின் ஸ்கோர் 64 ரன்களாக இருந்த போது, ரோகித் சர்மா 28 ரன்களில்(44 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 16 ஓவர்களில், 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. சிறிது நேரத்தில் கேதர் ஜாதவும் 40 ரன்களில் (54 பந்து, 5 பவுண்டரி) வெளியேறிதால், இந்திய அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நைல் தொடக்கத்திலேயே இந்திய அணியின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். 5 ஓவர்களை வீசியிருந்த நைல், 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, இந்திய அணியின் 3 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, மாஜி கேப்டன் டோனி துணையுடன் வெளுத்துக் கட்டினார். 38 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. டோனி 56 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 63 ரன்கள் குவித்திருந்தார் இதில் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த பாண்ட்யா, 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அவரது இந்த ஸ்கோரில் 5 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். பாண்ட்யா, சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்!

இன்னொரு முனையில் பொறுமையாக விளையாடிய ‘சென்னை ரசிகர்களின் தல’ டோனி, 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்கள் பறந்தன. கடைசி நேரத்தில் புவனேஷ்குமாரும் கணிசமான பங்களிப்பைக் கொடுத்ததால், (30 பந்துகளில் 32 ரன்கள், நாட் அவுட்) இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, போட்டியில் மழை குறுக்கிடவே, ஆட்டம் தடைபட்டது. இதனால், 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தது ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 39 ரன்களும்(18 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்ஸர்), டேவிட் வார்னர் 25 ரன்களும்(28 பந்து, 4 பவுண்டரி) எடுத்தனர். 21 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

×Close
×Close