/indian-express-tamil/media/media_files/2025/09/24/india-vs-bangladesh-2025-09-24-17-29-27.jpg)
Ind vs Ban Super 4, India vs Bangladesh Live Score Updates today: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.
லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் தொடங்கி நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் - இந்தியா முதலில் பேட்டிங்
இந்நிலையில், டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி அரைசதம் அடித்து அசத்தி இருந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்பிறகு, கேப்டன் சூரியகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா ஜோடியில் சூரியகுமார் 5 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் 5 ரன்னில் அவுட் ஆனார். ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அக்சர் படேல் 10 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதனால் வங்க தேச அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி
தொடர்ந்து, 169 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து ரன் சேர்க்க போராடியது. சிறப்பாக மட்டையைச் சுழற்றிய தொடக்க வீரர் சைஃப் ஹாசன் அரைசதம் அடித்து அசத்தினார். தனி ஒருவனான போராடிய அவர் அதிகபட்சமாக 69 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். விக்கெட் சரிவை மீட்க போராடிய வங்கதேச அணி ஆட்டத்தில் 3 பந்துகள் (19.3) மீதம் இருக்க ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் குல்தீப் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி தலா 2 விக்கெட்டையும், திலக் வர்மா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
வங்கதேசம்: சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்.
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us