இங்கிலாந்தின் 100% வின்னிங் ரெக்கார்ட்! இன்று உடைத்தெறியுமா இந்திய அணி?

இந்தியா vs இங்கிலாந்து 2வது டி20 போட்டி

இந்தியா vs இங்கிலாந்து 2வது டி20: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிற்கு நீண்ட கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியன் டீம், முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவை ஒருநாள், டி20 என ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து அணி, பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பாக வென்றது. லோகேஷ் ராகுல் சதம்(101*) அடித்தார். இது வரலாறு.

இந்நிலையில், கார்டிஃப் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் இரண்டாவது டி20 போட்டியில், இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் போட்டியில் தமிழ்நாட்டு எக்ஸ்பிரஸ் ரயிலைப் போன்று சீராக சென்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி, குல்தீப் யாதவிடம் சிக்கி உத்தர பிரதேச ரயிலைப் போல தடம் புரண்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, அந்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில், ‘ட்வின் ஸ்பின்’னர்களான குல்தீப் மற்றும் சாஹலிடம் ஒட்டுமொத்தமாக மடிந்தது தென்னாப்பிரிக்கா. அதேபோன்றதொரு நிலைமை தான், ஆஸ்திரேலியாவை பந்தாடிவிட்டு இந்தியாவை சந்தித்த இங்கிலாந்திற்கும் நடைபெற்றுள்ளது.

ஆக, இந்தியாவின் ஸ்பின்னை எதிர்கொள்வதில் இங்கிலாந்து மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இங்கிலாந்து வீரர் க்ரிஸ் ஜோர்டன் கூறுகையில், “எங்கள் பேட்ஸ்மேன்கள் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து ஃபிரண்ட் ஃபூட் (Front Foot) எடுத்து ஆடினால், நிச்சயம் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதற்கேற்றவாறு பயிற்சிகள் சென்றுக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே, இன்று இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக கவுன்ட்டர்அட்டாக்கிங் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  பொதுவாக, ஸ்பின்னர்களை கவுன்ட்டர்அட்டாக் செய்ய, ஸ்கொயர், ஸ்வீப் மற்றும் லேப் ஷாட்ஸ் கொண்ட பேக்வேர்ட் ஸ்கொயர் பகுதிகளை தான் பேட்ஸ்மேன்கள் அதிகம் டார்கெட் செய்வார்கள். ஆனால், முதல் போட்டியில் ராகுல் அடித்த ஸ்ட்ரெய்ட் ஷாட்கள் போன்று முயற்சி செய்தால், இங்கிலாந்து சமாளிக்க நல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் எவ்வாறு அதை செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்திய அணியை பொறுத்தவரை, முதல் போட்டியில் புவனேஷ் குமார் 4 ஓவரில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்தது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும். பும்ரா வேறு அணியில் இல்லை. ஆக, ஸ்பின் எனும் ஆயுதத்தை மட்டும் நம்பி இருக்காமல், வேகப்பந்து வீச்சின் வீச்சை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

இன்றைய மேட்சின் முக்கிய அம்சங்கள்:

ரோஹித் ஷர்மா இன்று 19 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கேப்டன் கோலிக்கு அடுத்து பெறுவார்.

கடந்த மார்ச் 8, 2018 முதல் இந்திய அணி தொடர்ச்சியாக 7 டி20 போட்டிகளில் வென்றுள்ளது.

இன்று போட்டி நடைபெறும் கார்டிஃப் மைதானத்தில், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி இதுவரை தோற்றதே கிடையாது. வின்னிங் பெர்சன்ட் 100.

ஆக, இன்றைய போட்டியில் வெல்லப் போவது இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிரான ‘Counter Attacking’-ஆ அல்லது இந்திய அணியின் ‘Be Cool’ ஸ்டிராடஜியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close