India vs West Indies LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதலிரண்டு போட்டிகளை வென்று இந்தியா கோப்பையைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இரண்டு போட்டிகளில் ஆடிய பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதன்பிறகு, ஒருவருடம் கழித்து இப்போது தான் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.
அதுவும் சேப்பாக்கத்தில் இதுவரை ஒரேயொரு சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2012ம் ஆண்டு இந்தியாவும், நியூசிலாந்தும் அந்தப் போட்டியில் மோதியிருந்தன. புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு, யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைத்த முதல் போட்டி அது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதுவும், 'கிங் ஆஃப் சேஸிங்' தோனி, 22 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றும் வீழ்ந்தது தான் 'என்னடா இது தோனிக்கு வந்த சோதனை' மொமன்ட்.
அந்தப் போட்டிக்குப் பிறகு, இப்போது 6 வருடம் கழித்து இந்திய அணி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். பட், ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்.
சரி விடப்பா... இன்னும் 4 மாசத்துல மஞ்சள் ஜெர்ஸியில பார்த்துக்கலாம்!.
3வது டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (wk), மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, ஷாபஸ் நதீம், சித்தார்த் கவுல்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, டி20 என்பது அவர்களது கோட்டை. ஆனால், அதிலேயே அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். அட்லீஸ்ட், இந்த 3வது போட்டியிலாவது வென்று நாடு திரும்பினால், கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.
நாளை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 6.30 மணிக்கு டாஸ். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஆட்டத்தை லைவாக காணலாம்.
ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை லைவாக காணலாம். (சந்தா பணம் கட்ட சொல்றாய்ங்க.. பார்த்துக்கோங்க)
தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் Live Cricket Score Card-ஐ காணலாம்.