Advertisment

ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐபிஎல் 2017: பிளேஆஃப்  சுற்று கெஸ்ஸிங்.....

டெல்லியில் விவசாயிகள் போராட்டம், தமிழக அரசியல் கதகளி ஆகியவை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், எந்தவித பாதிப்புமின்றி, எதிர்ப்புமின்றி எப்போதும்போல சிறப்பாகவே இந்தாண்டும் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ஐபிஎல்-ன் 10-வது சீசன்.

Advertisment

'அடுத்த வருஷம் தல தோனியோடு எப்படி வரோம் -னு மட்டும் பாரு'-னு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஒருபக்கம் மீம்ஸ் போட்டுத் தள்ள, 'எங்களை மறந்துட்ட பார்த்தியா' எனும் மோடில் ராஜஸ்தான் ராயல்சும் உறும , 'அதை அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்' என மற்ற எட்டு அணிகளும் கோதாவில் இறங்கி நடப்பு தொடரில் மல்லுக்கட்டி வருகின்றன. தற்போது வரை ஒவ்வொரு அணிகளின் நிலைமையையும் அதன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகள் குறித்தும் இங்கே பார்ப்போம் வாங்க.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

'எங்க அணிக்கு யாரோ சூனியம் வச்சுட்டாய்ங்க' என்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை கதறாத குறைதான். அந்த அளவிற்கு நடப்புத் தொடரில் ஆர்சிபி அணி மிக மட்டமாக விளையாடி வருகிறது. ஆரம்ப சில போட்டிகளில் காயம் காரணமாக கோலி , டி வில்லியர்ஸ் விளையாடாமல் போனாலும், அதற்குபின் அவர்கள் அணியில் இணைந்த பின்னும் பெரிதாக முன்னேற்றம் இல்லை. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி, 5-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் பெற்றுள்ளது. இன்னும் மீதமுள்ள 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளிலாவது வெற்றிப் பெற வேண்டும். இல்லையெனில், 'அடுத்த வருஷம் சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு பெட்டியைக் கட்ட வேண்டியதுதான்.

குஜராத் லயன்ஸ்:

'எங்களைச் சுற்றி என்ன நடக்குதுனே தெரியல' மோடில் தான் ரெய்னாவின் குஜராத் அணி உள்ளது. மெக்குல்லம், ஃபின்ச், ட்வைன் ஸ்மித், ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா என பல நட்சத்திரங்கள் இருந்தும்

தோல்வி என்பதை அவர்களால் தவிர்க்கவே முடியவில்லை. பந்துவீச்சு தான் அந்த அணியின் மிகப்பெரிய பின்னடைவு. முதல் இரு ஆட்டங்களையும் சேர்த்து அந்த அணி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியதில் இருந்தே அவர்களின் பவுலிங் திறனை நாம் அறிந்து கொள்ளலாம். பெங்களூருவைப் போல 7 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத், 5 தோல்வியையும், 2 வெற்றியையும் பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் ஆறினை வென்றாக வேண்டும் பிளேஆஃபை உறுதி செய்ய. இல்லனா பை...பை... தான்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

'நல்லா விளையாடுற மாதிரியும் இருக்கு...விளையாடாத மாதிரியும் இருக்கு...' என்கிற மோடில் தான் இந்த அணி உள்ளது. ஜாஹீர்கான் தலைமையிலான டெல்லி அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமஅளவு பலத்துடன் உள்ளது. ஆனால், அந்த பலம் எதிரணியை வீழ்த்த போதவில்லை. அதுதான் அவர்களுடைய பிரச்சனை. நடப்புத் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் தான் இந்த அணி தொடங்கியது. சஞ்சு சாம்சனின் சதம், கிறிஸ் மோரிஸின் ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ், ஜாஹீரின் துல்லியமான பவுலிங் என சிறப்பான விஷயங்களின் எண்ணிக்கை தொட்டுக் கொள்ளும் அளவில் தான் உள்ளது. அள்ள முடியவில்லை. 6 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி 2 வெற்றியையும், 4 தோல்வியையும் பெற்றுள்ளது. கொஞ்சம் நல்ல நேரமும், முயற்சியும் இருந்தால் பிளேஆஃப் கதவு திறக்கப்படும்.

கிங்ஸ் XI பஞ்சாப்:

'கேப்டன்ஷிப் பார்ப்பதா....?? நன்றாக ஆடுவதா....??' என்ற குழப்ப மனநிலையிலேயே அந்த அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் ஆடுவதால், அந்த குழப்பம் அணியினரிடமும் வேரூன்றி பரவிவிட்டது எனலாம். 'பரவாயில்லையே...நல்லா ஆடுறாங்களே' என்று சொல்லும் அளவிற்கு முதல் இரு போட்டிகளையும் வென்ற பஞ்சாப், அதற்கு பின் சொதப்ப தொடங்கிவிட்டது. டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், இயான் மார்கன், மார்ட்டின் கப்தில், ஆம்லா, சாஹா என்று பெரிய படையே உள்ளது. ஆனால், சிறப்பான பந்துவீச்சு கூட்டணி இல்லாததால் தோல்வியைத் தவிர்க்க முடிவதில்லை. 7 போட்டிகளில் 3 வெற்றியும் , 4 தோல்வியும் பெற்றுள்ள பஞ்சாப், பிளேஆஃ ப் சுற்றை நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், ஆக்ரோஷமான பந்துவீச்சைப் பற்றி முதலில் நினைத்துப் பார்க்கவேண்டும்.

publive-image

புனே சூப்பர் ஜெயண்ட்:

'நாங்க எப்படி ஜெயிப்போம் என எங்களுக்கே தெரியாது... திடீர்னு ஜெயிப்போம்.. இல்லனா வந்துக்கிட்டே இருப்போம்' என்பது தான் இந்த அணியின் மந்திரம். கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்கியதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல...ஸ்டீவன் ஸ்மித்தும் சாதாரண வீரரல்ல...ஆனால், அணி எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்தே ஒரு கேப்டனின் திறமை மதிப்பிடப்படும். இது அனைவருக்கும் பொருந்தும் என்பதை அந்த அணி நிர்வாகம் புரிந்து கொண்டால் நல்லது. விஷயத்திற்கு வருவோம்... இம்ரான் தாஹிர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியின் மிகப்பெரிய பலம் என்று கூறலாம். மற்றபடி தோனி , ரஹானே, ஸ்மித் ஆகியோரது ஆட்டம் சீராக இல்லை என்பது மாபெரும் குறை. இப்படியே விளையாடினால், பிளேஆஃப் சுற்றில் நுழைவது கடினமே. 7 போட்டிகளில் ஆடியுள்ள புனே, 4 வெற்றியும், 3 தோல்வியும் பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

'வார்'னர்-னு பேர் வச்சதனாலயோ என்னவோ...வார்-ல ஆக்ரோஷமாக போரிடுவது போன்று விளையாடுவது தான் கேப்டன் டேவிட் வார்னர் ஸ்டைல். அந்த அணியின் ஒட்டுமொத்த எனர்ஜியையும் இவர்தான் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பார் போல. அந்த அளவுக்கு இந்த மனுஷனிடம் எனர்ஜியை நாம் பார்க்க முடியும். அது அப்படியே அணியிலும் பிரதிபலிப்பது இயற்கைதானே. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள சன்ரைசர்ஸ், புனேவைப் போல 4 வெற்றியும், 3 தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால், பேட்டிங், பவுலிங் என தொடர்ந்து சீரான பங்களிப்பை அவர்கள் கொடுத்து வருவதால், நிச்சயம் பிளேஆஃப் சுற்றில் இந்த அணியைக் காணலாம். பேட்டிங் இந்த அணியின் பலம். பவுலிங் மிகப்பெரிய பலம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

'மாற்றம்.... அது என்றுமே மாறாதது' என்பது கேப்டன் கம்பீரின் தாரக மந்திரம் போல. 7-வது அல்லது 8-வது இடத்தில் இறங்கி ஆடிவந்த சுனில் நரைனை, நடப்புத் தொடரில் தொடக்க வீரராக களமிறக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கம்பீர். அதேபோல், கிறிஸ் லின் திறமையை கண்டறிந்து, அவரையும் தொடக்க வீரராக களமிறக்கி வெற்றிக் கண்டுள்ளார். கிறிஸ் கெயிலே பேட்டிங் பிடித்தால் கூட 'சென்னை 28' படத்தில் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் பையனைப் போல, பேட்ஸ்மேனுக்கு பக்கத்திலேயே நிற்கிறார் கம்பீர். இப்படியான சில யுக்திகளை கடைப்பிடிப்பது அவரது பலம். சீரான விளையாட்டு இந்த அணியின் பிளேஆஃ ப் சுற்றினை உறுதி செய்யும் என நம்பலாம். 7 போட்டிகளில் 5 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது இந்த அணி.

மும்பை இந்தியன்ஸ்:

2 தோல்விகள்..அந்த இரண்டும் புனேவிற்கு எதிராக.. இந்த விஷயத்தைத் தவிர கவலைக் கொள்ளும் அளவிற்கு மும்பைக்கு வேறு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. 60% அட்டகாசமான பேட்டிங், 40% நேர்த்தியான பவுலிங் என்ற மிக்சிங்கோடு தான் இந்த அணி இத்தொடரில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் சற்று கவலைத் தரக் கூடிய ஒன்றாக இருந்தது. அதையும், புனேவிற்கு எதிராக விளாசிய அரைசதம் மூலம் நீக்கிவிட்டார் ரோஹித். இதே போன்று விளையாடினால் 98% நிச்சயம் இந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 8 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை 6 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது.

கிரிக்கெட் என்பது யாரும் துல்லியமாக கணிக்கக்கூடிய விளையாட்டு அல்ல. இனி எது வேண்டுமானாலும் நடக்கலாம். அனைத்து அணிகளுக்குமான முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்த பின்னர் நாம் மீண்டும் சந்திப்போம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment