டி20-க்கான முக்கிய அம்சத்தையே இழக்கிறதா டெல்லி டேர்டெவில்ஸ்? இப்படி தோற்கலாமா? #IPL2018Match6

டெல்லியின் நேற்றைய ஆட்டம், அவர்களால் பிளே ஆஃப்பிற்குள் நுழைய முடியுமா? என்ற சந்தேகத்தையே நமக்கு வலுவாக ஏற்படுத்தியுள்ளது

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி டேர் டெவில்ஸ் அணி தோற்று இருக்கும் விதம் கொஞ்சம் நம்மை அதிர்ச்சிக்கும், சிந்தனைக்கும் ஆழ்த்தியுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணியின் ஒப்பனர்கள் அஜின்க்யா ரஹானே, டேர்சி ஷார்ட் களமிறங்கினர். 6 ரன்னில் ஷார்ட் ரன் அவுட் ஆக, கேப்டன் ரஹானே 45 ரன்கள் எடுத்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 40. ஸ்டிரைக் ரேட் 112.50. (டி20 ஆட்டத்துக்கு இது போதாது ரஹானே. கியரை மாத்துங்க!).

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆட ஆரம்பித்த ஜோஸ் பட்லரை 29 ரன்னில் ஷமி போல்டாக்கினார்.

17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின், இரவு 11.55 மணிக்கு ஆட்டம் ஆரம்பமானது. டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றிப்பெற 7 ஓவர்களில் 71 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், டெல்லி அணியால் 7 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கிளென் மேக்ஸ்வெல், காலின் மன்ரோ ஒப்பனர்களாக களமிறங்கினர். மன்ரோ பந்தை எதிர்கொள்ளாமலே ரன் அவுட்டாக, மேக்ஸ்வெல் 12 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 20 ரன்களும், க்ரிஸ் மோரிஸ் 17 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கம்பீர் களமிறங்கவே இல்லை. தமிழகத்தின் விஜய் ஷங்கர் 3பந்துகளுக்கு 3 ரன் மட்டும் எடுத்தார்.

டெல்லி தோற்றத்தில், நமக்கு ஆச்சர்யம் இல்லை. ஆனால் டி20 போட்டியில் 7 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க முடியாமல் டெல்லி தோற்றது தான் நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரன் ரேட் 10 தான். மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், பேட்டிங் சிரமமாக இருந்தது எனும் வாதத்தை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இவற்றையும் மீறி டெல்லி வென்றிருக்க வேண்டும்.

மேக்ஸ்வெல், மன்ரோ இருவரும் டெல்லி அணியில் உள்ள உச்சக்கட்ட அதிரடி வீரர்கள். ஆனால், இவர்களைத் தவிர மேட்ச் வின்னர்கள் யாரும் அந்த அணியில் இல்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. கம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய சிறந்த டி20 வீரர்களும் இங்கு உள்ளனர். ஆனால், இவர்களால் தனியாளாக மேட்சை முடிக்க முடியுமா? என்பது சந்தேகமே.

அதேபோல், மேக்ஸ்வெல் சிறப்பாக ஆட வேண்டியது மிக முக்கியம். அவரது ஆட்டம் தான் மிடில் ஆர்டரில் டெல்லி அணியை வலுப்படுத்தும். தமிழகத்தின் விஜய் ஷங்கர் இனியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை எனில், கஷ்டம். நேற்று சந்தித்த 3 பந்தில் அட்லீஸ்ட் ஒரு சிக்ஸராவது அடித்திருக்க வேண்டாமா? அப்போது தானே விஜய், உங்கள் மீது சிறிதளவாவது நம்பிக்கை மிச்சமிருக்கும். நீங்கள் சாதிக்க வேண்டும் என்பதே நமது ஆசை!.

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் விஜய்… நீங்கள் சிக்ஸர் கூட அடிக்கத் தேவையில்லை. ஆனால், நீங்கள் அடிக்கும் ஷார்ட் இருக்கு பாருங்கள்… அதுவே உங்களது திறமையை காட்டிவிடும். உங்களது ஷார்ட்டில் வேகமும், விவேகமும் இருந்தால், அணி தோற்றால் கூட, நிச்சயம் உங்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.

கம்பீர், மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர். இவர்கள் மூவரின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தால் மட்டுமே, டெல்லியால் லீக் போட்டிகளில் வெற்றிகளை வரிசைப்படுத்த முடியும் என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், டெல்லியின் நேற்றைய ஆட்டம், அவர்களால் பிளே ஆஃப்பிற்குள் நுழைய முடியுமா? என்ற சந்தேகத்தையே நமக்கு வலுவாக ஏற்படுத்தியுள்ளது.

டி20, பேட்டிங் ஆதிக்கம் செலுத்தும் களம். அங்கு, அதிரடி பெருக்கெடுத்து ஓடும். டெல்லி டேர் டெவில்ஸ், இதை எந்தளவிற்கு கடைபிடிக்கிறதோ, அந்தளவிற்கு அவர்களுக்கு நல்லது. இல்லையெனில், மீண்டும் ஒரு மோசமான ஐபிஎல் வருடத்தை, டெல்லி கடக்க நேரிடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close