'தல' தோனி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் தக்க வைத்தது சிஎஸ்கே! முழு லிஸ்ட் இங்கே!

இதில், ஆச்சர்யப்படும் விஷயம் என்னவெனில், பொல்லார்ட் பெயரையும், பும்ரா பெயரையும் மும்பை அணி நிர்வாகம் அளிக்கவில்லை

மேட்ச் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி இரண்டு வருடம் தடை பெற்று, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கலந்து உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், மீண்டும் தோனியை அணியில் தக்க வைத்துள்ளது.

இந்தாண்டு நடக்கவுள்ள 10-வது ஐபிஎல் தொடரில், எந்தெந்த வீரர்களை அணிகள் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது என்கிற விவரத்தை, ஜனவரி 4ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், பிசிசிஐ-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு அணியில் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட வேண்டும் என்பது விதி. இதனால், அனைத்து அணிகளும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை சமர்பித்து வருகின்றன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா ஆகிய மூன்று பேரை தக்க வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதில், ஆச்சர்யப்படும் விஷயம் என்னவெனில், பொல்லார்ட் பெயரையும், பும்ரா பெயரையும் மும்பை அணி நிர்வாகம் அளிக்கவில்லை. அதேசமயம், இவர்களை RTM கார்டு மூலம் மீண்டும் அந்த அணி எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருபவர்கள்.

இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, மீண்டும் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களது லிஸ்ட்டை கொடுத்துள்ளன. இதில், இப்போதைக்கு ராஜஸ்தான் அணி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை மட்டும் ரீடெய்ன் செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எதிர்பார்த்தது போலவே, கேப்டன் தோனியையும், ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்க வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. பிராவோ, அஷ்வின் RTM கார்டு மூலம் மீண்டும் அணியில் இணைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரையும், தீபக் ஹூடாவையும் ரீடெய்ன் செய்வதாக தெரிவித்துள்ளது.

அதுசரி, RTM கார்டு என்றால் என்ன?

RTM என்றால் Right To Match என்று அர்த்தம்.

அதாவது, முன்பே கூறியது போல, ஐபிஎல் தொடரில், ஒரு அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளலாம். இது அந்தந்த அணிகளின் விருப்பம். கட்டாயம் கிடையாது. அப்படி, தக்க வைக்க வேண்டுமெனில், அந்த வீரர்கள் மூவரும் இந்திய தேசிய அணிக்காக ஆடியிருந்தால், மொத்தமாக 33 கோடிகளை, சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் செலவு செய்ய வேண்டும். முதல் வீரரின் தொகை, 15 கோடி, இரண்டாவது வீரரின் தொகை 11 கோடி, மூன்றாவது வீரரின் தொகை 7 கோடி என செலவிட வேண்டும்.
இதைத் தவிர, மேலும் ஒரு வீரரை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் RTM கார்டை பயன்படுத்தலாம். உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஷ்வினை மீண்டும் தக்க வைக்க விரும்புகிறது என வைத்துக் கொள்வோம். அவர் பெயர் ஏலத்தில் விடப்படும் போது, மும்பை அணி அவரை இறுதியாக ஐந்து கோடிக்கு ஏலம் கேட்கிறது என்றால், சென்னை அணி அஷ்வினை ஐந்து கோடிக்கே எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம், அஷ்வினை மீண்டும் சென்னை வாங்கிக் கொள்ள முடியும்.

கூடுதல் தகவல்: மும்பை அணியில் மூன்றாவது வீரராக தக்க வைக்கப்பட்டுள்ள க்ருனல் பாண்ட்யாவும், சன்ரைசர்ஸ் அணியின் இரண்டாவது வீரராக தக்க வைக்கப்பட்டுள்ள தீபக் ஹூடாவும், இந்திய அணிக்காக இதுவரை விளையாடியதில்லை. இவர்கள் ‘Uncapped Players’ என்று அழைக்கப்படுகிறார்கள். இதனால், இவர்களை குறைந்த தொகைக்கு அணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் அந்தந்த அணிகளின் விருப்பமே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close