"என்னை செதுக்கிய சுனில் நரைன்" - ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டி

நான் மிகப்பெரிய விஜய் ரசிகன். எங்க இருந்தாலும் சரி; தளபதியின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன்

ஐ.பி.எல் தொடரில் 12 வது சீஸனுக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, ஒரு தமிழக வீரர் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனது தான். ஏழு வருடம் கட்டிடக்கலை நிபுணராக வேலை பார்த்துவிட்டு, பின்பு தான் மிகவும் விரும்பிய கிரிக்கெட் விளையாட்டிற்கே வந்து, domestic போட்டிகளில் பட்டையை கிளப்பி ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற வருண் சக்கரவர்த்தியை சென்னையில் சந்தித்து பேசினோம்.

ஏலத்தின் போது இருந்த பதற்றம்..

“நான் ரொம்ப டென்ஷனா இருந்தேன். அப்பா அம்மா கூட தஞ்சாவூர்ல இருக்குற எங்க வீட்ல தான் நான் ஐ.பி.எல் ஏலத்தை பார்த்து கொண்டுக் இருந்தேன். ஒவ்வொரு அணியும் எனக்கு Bid பண்ணும்போது ரொம்பவே nervous-ஸா இருந்துச்சு, இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,” என்கிறார் வருண். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் இயங்கும் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தான் இவரை ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணிக்காக ஆட இருக்கும் ஒன்பதாவது தமிழக வீரர் ஆகிறார் வருண்!

தஞ்சையை தனது பூர்வீகமாக வருண் கொண்டிருந்தாலும், அவர் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டது எல்லாம் சென்னையில் தான். “நான் வளர்ந்தது எல்லாமே சென்னையில தான். மீடியம் பேசராக தான் எனது கிரிக்கெட் பயணம் ஆரம்பித்தது. நான் முதலில் ரிசர்வ் பேங்க் அணிக்காக விளையாடினேன். பின்பு ஜூபிலி சிசி, மேக்னெட் சிசி போன்ற அணிகளுக்காக விளையாடினேன். கிரொம்பஸ்ட் அணிக்காக விளையாடும் பொழுது எனக்கு இஞ்சூரி ஆயிடுச்சு, அதுக்கு அப்புறம் தான் ஸ்பின் பௌலிங் பண்ண ஆரம்பிச்சேன்.”

இப்படி கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் வருண், ஒரு காலத்தில் அதை முற்றிலும் மறந்தே விட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். சுமார் ஏழு வருடம் கிரிக்கெட்டை வருண் முற்றிலும் மறந்து தனது கட்டிடக்கலை துறையில் கவனம் செலுத்தினர். அப்பொழுது ஒரு சின்ன கிரிக்கெட் மேட்ச் கூட அவர் பார்க்க மாட்டாராம். பின்பு அந்த பணியில் தனக்கு போதுமான அளவு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

திருப்பம் கொடுத்த TNPL

தனது வெற்றியின் முக்கிய பங்கு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடருக்கு சேரும் என்கிறார் வருண். TNPL தொடர் கண்டிப்பா எனக்கு நிறைய கத்து கொடுத்தது. சீனியர் வீரர்களான அருண் கார்த்திக், சுதீப் சந்திரன் மற்றும் ரஹீல் ஷா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணாங்க.”

இந்த ஆண்டு TNPL தொடரின் சாம்பியனாக முடிசூடியது மதுரை பாந்தர்ஸ் அணி! அதற்கு முக்கிய காரணம் வருண். இவர் விளையாடிய 10 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது எகானமி கூட ஐந்துக்கு கீழ் தான் இருந்தது.

இந்த பெர்ஃபார்மன்ஸ் அவரை தமிழ்நாடு அணிக்கு அழைத்துச் சென்றது. இவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய முதல் தொடரான விஜய் ஹசாரேவிலும் அசத்தினார். 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை அள்ளினார். முதன் முறையாக டாப் தமிழ்நாடு வீரர்களுடன் பழகிய அனுபவத்தை கூறுகிறார், வருண். “கண்டிப்பா விஜய் ஹசாரே நான் முன்பு விளையாடிய தொடர்களில் இருந்து 3-4 சதவீதம் கடினமாக இருந்துச்சு. அங்க இந்திய அணிக்காக விளையாடிய அபினவ் முகுந்த், விஜய் ஷங்கர் போன்றோரிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.”

TNPL தொடர் முடிந்தபின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெட் பௌலராக வருண் பணியாற்றியுள்ளார். சென்னையின் போட்டிகள் வேற ஊருக்கு மாற்றப்பட்ட பின்பு தினேஷ் கார்த்திக் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நெட் பௌலராக வருண் சென்றுள்ளார். “தினேஷ் கார்த்திக் சொன்ன அப்புறம், நா கொல்கத்தா அணிக்கு நெட் பௌலராக போனேன். அங்க நிறைய இன்டர்நேஷனல் கிரிக்கெட்டர்ஸ் இருந்தாங்க, குறிப்பாக சுனில் நரேன் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். ‘PRESSURE’ தருணங்களில் எப்படி பௌலிங் பண்ணனும், போன்றவற்றை கத்துக்கொடுத்தார்.”

அந்த 7 Variation.. மிஸ்டரி ஸ்பின்னர் பட்டம் …

வருண் சக்கரவர்த்தியின் மேஜிக் அவரது பந்து வீச்சில் காட்டும் ‘Variation’ தான். ‘மிஸ்டரி ஸ்பின்னர்” வருண் ஏழு ‘Variation’ வரை தனது பந்துவீச்சில் காட்டுவார் என்று அனைவரும் கூறுகிறார்களே, உண்மை என்ன? என்று வருணிடம் கேட்டால், ‘ஐய்யயோ அது எல்லாம் இல்லை’ என்கிறார். “நா மிஸ்டரி ஸ்பின்னர் அப்டினு எங்கேயுமே சொன்னது இல்ல. மீடியா தான் அப்படி என்ன கூப்பிட ஆரமிச்சாங்க. என்னோடைய ‘Variation’ எல்லாத்தையும் எனக்கு ஞாபகம் வெச்சிக்க தெரியல. லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் தவிர டாப் ஸ்பின் டெலிவரிகளை கொஞ்சம் நிறைய பயன்படுத்துவேன்; அவ்ளோதான்,” என்கிறார் சாதாரணமாக.

27-வயது நிரம்பிய வருண் சக்கரவர்த்தியினால் ஒரு பழக்கத்தை கைவிடவே முடியாதாம். “நான் எங்கு சென்றாலும் கிரிக்கெட் பந்தை எடுத்து சென்றுவிடுவேன், அது எந்த விழாவாக இருந்தாலும் சரி.”

தளபதி ரசிகன் நான்!

சரி, வருணிற்கு பிடித்த சினிமா நட்சத்திரம் யார்? வேற யாரு நம்ப தளபதி தான், “நான் மிகப்பெரிய விஜய் ரசிகன். எங்க இருந்தாலும் சரி; தளபதியின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன்,” என்று பேட்டியை முடித்தார் வருண்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close