IPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ்! பிளேயிங் லெவனில் ஆடப் போவது யார்?

தோனி உட்பட அணி நிர்வாகம் இவர் மீது பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளது

ஐபிஎல் 2019 சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் தொடர் தென்னப்பிரிக்காவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 18ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில், அனைத்து அணிகளும் பல புதிய வீரர்களை போட்டிப் போட்டு வாங்கினர். ஒரு அணியைத் தவிர…. சென்னை சூப்பர் கிங்ஸ்.

‘மஞ்ச சட்டை எங்கப்பா?’ என்று தேடும் அளவிற்கே அன்று ஏலத்தில் ஆக்டிவாக இருந்தது சிஎஸ்கே. இதற்கு காரணம், கடந்த சீசனில் அணியில் இருந்த மூன்று வீரர்கள் மட்டுமே, சென்னை அணி வெளியேற்றியது. இதனால், அதிகம் புதிய வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு ஏற்படவில்லை.

சென்னை அணிக்காக 2013-15 வரை ஆடிய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மாவை ஐந்து கோடிக்கு எடுத்த  நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட் எனும் 21 வயது இளம் பேட்ஸ்மேனை 20 லட்சத்துக்கு எடுத்தது. 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இவ்விரண்டு மாற்றங்கள் மட்டுமே.

பெரும்பாலான அணிகள் ஆல் ரவுண்டர்களை ஏலத்தில் எடுப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டின. அந்த வகையில், 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர்கள் தரம் எப்படி இருக்கிறது? சமாளிக்க முடியுமா? பிளேயிங் XIல் இடம்பிடிக்க வாய்ப்புள்ள ஆல் ரவுண்டர்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

ஷேன் வாட்சன்

டுவைன் பிராவோ 

ரவீந்திர ஜடேஜா 

கேதர் ஜாதவ்

மிட்சல் சான்ட்னர்,

டேவிட் வில்லே,

பிஷ்னோய்

ஆகிய 7 ஆல் ரவுண்டர்கள் சிஎஸ்கேவில் உள்ளனர்.

ஆனால் இதில், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகிய ஆல் ரவுண்டர்களுக்கே ஆடும் லெவனில் விளையாட அதிக வாய்ப்பிருக்கும் என்று சொல்லலாம்.

கடந்த சீசனில், பந்துவீச்சில் பெரியளவில் ஜொலிக்காவிட்டாலும், பேட்டிங்கில் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் வாட்சன். பந்துவீச்சில், தோனி எப்போது அழைத்தாலும் ரெடியாக இருப்பவர் என்பதால், வாட்சன் முதல் சாய்ஸ் என்பதில் சந்தேகமில்லை.

பிராவோ பொறுத்தவரை, கடைசிக் கட்ட சிக்ஸர்கள், டெத் பவுலிங் இவரது பலம். போன சீசனில், முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை, அவர்கள் மண்ணில் சிக்ஸர்களால் பொளந்தவர் இவர். இருப்பினும், சில போட்டிகளில் டெத் ஓவர்களில் சொதப்பி, தோனியை டென்ஷன் ஆக்கினார். ஆயினும், தோனியின் ஃபேவரைட் லிஸ்டில் இவருக்கும் இடமுண்டு.

ரவீந்திர ஜடேஜா… கடந்த சீசனில் ‘ஏன் இவரை இன்னும் தோனி அணியில் வைத்திருக்கிறார்?’ என்று ரசிகர்கள் கடுப்பாகும் அளவிற்கு சொதப்பினாலும், இரண்டாம் பாதி தொடரில் நன்றாகவே பவுலிங் செய்தார். ஸ்பின் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஜடேஜாவிற்கு கேப்டன் தோனி, கோச் பிளமிங் என இருவரின் ஆதரவும் பலமாக இருப்பதால், இந்த சீசனிலும் தொடக்க ஆட்டங்களில் இவருக்கு மாற்று சாய்ஸ் இருக்காது என நம்பலாம்.

கேதர் ஜாதவ்… தோனி உட்பட அணி நிர்வாகம் இவர் மீது பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளது. ஸ்பின் ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ், கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து தொடரை விட்டே வெளியேறினார். இப்போது, முழு ஃபிட்டாக களமிறங்க காத்திருக்கும் ஜாதவுக்கு நிச்சயம் அணியில் வாய்ப்புண்டு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close