ஹை பிரஷரில் ஹைதராபாத் ஆட்டம்! சென்னையை வீழ்த்துமா எஸ்ஆர்ஹெச்?

ஓப்பனர்ஸ் + பவுலிங் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். 

ஐபிஎல் 2019 தொடரில், ஹைதராபாத்தில் இன்று(ஏப்.17) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஹிஸ்டரி என்ன?

ஹிஸ்டரி, சயின்ஸ், ஜியாகிரஃபி என்று எதை எடுத்துப் பார்த்தாலும் ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்து வந்திருக்கிறது. இவ்விரு அணிகளும் ஐபிஎல்-ல் இதுவரை நேருக்கு நேர் மோதிய 10 ஆட்டங்களில் 8ல் சென்னையே வெற்றிப் பெற்றிருக்கிறது.

அதுவும் கடந்த 2018 சீசனில், இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஆட்டத்திலும் சென்னை அணியே வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியை முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரை, ‘ஹைதராபாத் மைந்தன்’ அம்பதி ராயுடு இந்த சீசனில் டோட்டலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படாததால், அந்த கோபத்தில் ராயுடு மீண்டும் சிஎஸ்கே-வுக்காக விளாசினால் தோனிக்கு லாபம்.

இவரைத் தவிர்த்து, ரெய்னா மற்றும் வாட்சன் ஆகியோரும் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். ரெய்னா கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தாலும், அவர் இன்னும் மாணிக்கமாகவே இருக்கிறார். பாட்ஷாவாகவில்லை.

வாட்சன் சுத்தம்… மினிமம் ஒரு ஓவர், மேக்ஸிமம் 3 ஓவர் என்பதே அவரது களப்பணியாக உள்ளது.

இருப்பினும், இவர்களைத் தவிர்த்து, ஜடேஜா உட்பட மற்ற அனைத்து வீரர்களும், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கு உதவி வருகின்றனர். இதுவரை எட்டு போட்டிகளில் ஆடி, ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கும் சிஎஸ்கே, இன்னும் 2ல் வெற்றிப் பெற்றால், பிளே ஆஃப்-ஐ உறுதி செய்துவிடலாம்.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, வார்னர், பேர்ஸ்டோ என்ற இரு குதிரைகளை மட்டும் வைத்து வண்டியை விரட்ட நினைத்தது. இவ்விரு குதிரைகளும் சாய்ந்தால், அச்சாணி முறிந்து வண்டியே அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறது.

மிடில் ஆர்டர் விவிஎஸ் லக்ஷ்மனே வந்து விளையாடலாம் என்று சொல்லும் அளவிற்கு படு வீக்காக உள்ளது. லோ ஆர்டரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஓப்பனர்ஸ் + பவுலிங் வைத்து முக்கிக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவரை 7 போட்டிகளில் ஆடி 4ல் தோற்றுள்ளது. ஸோ, பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டி லைவாக இன்று இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகும். 7.30 மணிக்கு டாஸ். எட்டு மணிக்கு மேட்ச் தொடங்குகிறது.

ஆன்லைனில், ஹாட்ஸ்டார் ப்ரீமியம் உள்ளவர்கள் போட்டியை காணலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் பிரத்யேக ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close