Advertisment

4 ‘கேட்ச்’களை மிஸ் செய்த சி.எஸ்.கே: டெல்லியை ஜெயிக்க வைத்த ‘சிக்சர்’ பட்டேல்

ஷிகர் தவானுக்கு மட்டும் சி.எஸ்.கே வீரர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
4 ‘கேட்ச்’களை மிஸ் செய்த சி.எஸ்.கே: டெல்லியை ஜெயிக்க வைத்த ‘சிக்சர்’ பட்டேல்

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியிடம், சி.எஸ்.கே தோற்றது. கடைசி ஓவரை ஜடேஜா வீசியது சர்ச்சை ஆனது. அந்த ஓவரில் சிக்சர்களை விளாசி டெல்லி ஜெயித்தது. இது குறித்து டோனி விளக்கம் அளித்தார்.

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட்டில் சனிக்கிழமை 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி வாட்சன், டுபிளிசிஸ், ராயுடு, ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடைசி வரை களத்தில் நின்று சதம் அடித்துக் கொடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் முனையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்‌ஷர் பட்டேல் நின்றார். ஷிகர் தவான் எதிர் முனையில் நின்றதால், சென்னைக்கு வெற்றி வாய்ப்பு தெரிந்தது.

ஆனால் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்றபோது, இடக்கை லெக் ஸ்பின்னரான ஜடேஜாவை கடைசி ஓவரை டோனி வீச வைத்தது ஆச்சர்யம்! காரணம், லெக் ஸ்பின்னர்களை சமாளித்து ரன் அடிப்பது, இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சுலபம். எனவே அந்த முடிவை டோனி எடுத்தது ஆச்சர்யமாக மட்டுமல்ல, அதிர்ச்சியாகவும் இருந்தது.

அதை மெய்ப்பிப்பதுபோல, ரவீந்திர ஜடேஜாவின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி பரிதாப தோல்வியை சந்தித்தது.

போட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்’ என்றார் டோனி.

ஷிகர் தவானுக்கு மட்டும் சி.எஸ்.கே வீரர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ராயுடு மிஸ் செய்த லட்டு போன்ற ஒரு கேட்ச்சும் அடங்கும். தவானின் அற்புத பேட்டிங்கும், கடைசி ஓவரில் சிக்சர் பட்டேலாக மாறிய அக்சர் பட்டேலும் டெல்லியை ஜெயிக்க வைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment