IPL 2021 Chennai Super Kings performance in IPL finals : நடப்பு ஐ.பி.எல். சீசனின் கடைசி ஓவரில் தோனி 12 ரன்கள் அடிக்க முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று 9வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 9-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ள சி.எஸ்.கே. கடந்த காலங்களில் தன்னுடைய எதிரணியை பந்தாடியதா அல்லது பணிந்து போனதா என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது சென்னை. இன்று நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் தோனியின் ஏவர்க்ரீன் ஆளுமை எப்படி இருக்க போகிறது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்திருங்கள்
மேலும் படிக்க : சாம்பியன் பட்டத்தை வாகை சூடப்போவது யார்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!
2008 IPL finals
முதன்முறையாக நடைபெற்ற ஐ.பி.எல். போட்டி இது. இந்திய கிரிக்கெட் அணியில் அபாரம் காட்டிய தோனி தலைமையில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் ஆதரவு சிறப்பாக இருந்தது. பலரும் முதல் கோப்பையை சி.எஸ்.கே. தான் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனாலும், எதிர் தரப்பில் நிலைத்து நின்று விளையாடி ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னையை பந்தாடியது. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பில் 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 42 ரன்களை எடுத்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது. அதிகபட்சமாக யூசஃப் பதான் 56 ரன்களை சேர்த்தார்.
2010 IPL finals
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சென்னைக்கும் மும்பைக்கும் இடையேயான மோதல்கள் இங்கிருந்து தான் ஆரம்பமானது. இந்த இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று பரபரப்பாக இருந்த முக்கியமான போட்டி இதுவாகும். சி.எஸ்.கே.வின் சின்னதல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா 57 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்கோரை 168க்கு உயர்த்தினார். சென்னையை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் 48 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அது அந்த அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. 8-வது வீரராக களம் இறங்கிய பொல்லார்ட் 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்து, மும்பை வெற்றி பெற்றுவிடுமோ என்ற பதட்டத்தை தந்தார். இருந்தாலும் தோனியின் கைகளில் மும்பையின் வெற்றிக் கனவு முடிவுக்கு வந்தது. முதல்முறையாக ஐ.பி.எல். சாம்பியனாக வளம் வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தோனி – வருண்… நரேன் – ராயுடு… இறுதிப்போட்டியில் எப்படி இருக்கும்?
2011 IPL finals
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். டேனியல் வெட்டோரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து போட்டியிட்டது சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மென்னாக களம் இறங்கிய முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்கள் அடித்து ராயல் சேலஞ்சர்ஸின் பந்துவீச்சாளர்களுக்கு சரியான சவாலாக அமைந்தார். 4 ஃபோர்கள், 6 சிக்ஸர்கள் என்று விளாசி அணியின் மொத்த ரன்களை 205க்கு உயர்த்தினார். அவரின் 182.69 என்ற ஸ்ட்ரைக் ரேட், ராயல் சேலஞ்சர்ஸ் களம் இறங்குவதற்கு முன்பே வெற்றியாளர்கள் யார் என்பதை ரசிகர்களை தீர்மானிக்க வைத்துவிட்டது. ப்ளேயர் ஆஃப் தி மேட்சை பெற்றார் முரளி விஜய். ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் க்றிஸ் கெய்ல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அடுத்து களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிதானமாக 20 ஓவர்கள் வரை நின்றாலும் வெற்றியை பெற இயலவில்லை. அதிகபட்சமாக சுரப் திவாரி 34 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். கேப்டன் டேனியலுக்கு ஒரு ரன்னுக்கான வாய்ப்பைக் கூட வழங்காமல் ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் செய்தார். அன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஸ்வின். ரெய்னா, பொலிங்கர், ப்ராவோ தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே பெங்களூரு அணி குவித்தது.
IPL 2021 Final: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்: 4-வது முறை சாம்பியன் ஆகுமா சிஎஸ்கே?
IPL 2012 Finals
இன்றைய சூழல் தான் 9 ஆண்டுகளுக்கும் முன்னாள் ஏற்பட்டுள்ளது. மே மாதம் 27ம் தேதி அன்று 2012ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. முதல் பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். 3 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள் என்று சிறப்பான ஆட்டத்தை அவ வெளிப்படுத்தினார். இருந்தாலும் கூட அன்றைய போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு சாதகமாக அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸின் விக்கெட் கீப்பர் மன்விந்தர் பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். 8 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்களை குவித்து அணிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார். அந்த போட்டியில் காலீஸ் 69 ரன்கள் அடிக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று, சென்னையின் ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் கனவை காலி செய்தது.
2013 IPL finals
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மே மாதம் 26ம் தேதி அன்று நடைபெற்றது. டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 148 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 32 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் பொல்லார்ட். 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ப்ராவோ. மிகவும் குறைவான ரன்களை கொண்ட ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான வெற்றி இலக்கு என்று கூறப்பட்ட இந்த இலக்கை நோக்கி பயணித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி சி.எஸ்.கேவுக்கு தான் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தனர் சென்னை அணியினர். முரளி, ப்ராவோ, தோனி, மோர்க்கெல் என நான்கு வீரர்களை தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதிகபட்சமாக தோனி 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆனாலும் ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சென்னை அணியினரால் பெற முடிந்தது.

2015 IPL Finals
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது 2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் இறுதி போட்டி. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரரான லெண்டி சிம்மோன்ஸ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். ரோகித் ஷர்மா 26 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அதனை அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்வைன் ஸ்மித் 48 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். ஆனால் அவரை தொடர்ந்து களம் இறங்கிய பலரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணியால் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
2018 IPL Finals
ஐ.பி.எல். சூதாட்டங்கள் காரணமாக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், ”திரும்பி வந்துட்டோம்னு சொல்லு” என்று கூறிய இறுதி ஆட்டம் இது. மும்பை நகரத்தில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டி. டாஸை வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 36 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். ஜடேஜா, ஷ்ரதுல் தாக்கூர், கர்ன் ஷர்மா, ப்ராவோ, லுங்கி ங்கிடி தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சன்ரைஸர்ஸ் அணியை தொடர்ந்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்ஸன் 57 பந்துகளில் 117 ரன்களை அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரின் சென்ச்சுரி அணியின் வெற்றியை உறுதி செய்தது. புவனேஷ்வர்குமார், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்து வெற்றி வாகை சூடியது சென்னை அணி

2019 IPL finals
ஹைதராபாத் நகரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடியாக களத்தில் இறங்கியது. டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ஆட்ட நே முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது. டூப்ளிசிஸ் மற்றும் ஷேன் வாட்ஸன் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக 59 பந்துகளில் 80 ரன்களை குவித்தாட் வாட்ஸன். 7 விக்கெட்கள் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சென்னை அணியால் பெற முடிந்தது. 1 ரன் வித்தியாசத்தில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. ஜெஸ்ப்ரித் பும்ப்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தின் இறுதி ஓவர் தான் சாம்பியன் யார் என்பதை தீர்மானம் செய்தது. இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா இறுதி ஓவரில் பந்து வீசினார். சென்னை அணிக்கு ஒரு ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5 பந்துகளில் 7 ரன்களை எடுத்த சென்னை அணி, இறுதி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் லசித் ஒரு விக்கெட்டை வீழ்த்த சென்னை அணி மும்பையிடம் தோல்வியை தழுவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil