Advertisment

CSK vs PBKS: சி.எஸ்.கே தொடர்ந்து 3-வது தோல்வி

சென்னை அணிக்கு 181 ரன்கள் இழப்பு; லிவிங்ஸ்டன் அதிரடி; பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவிப்பு

author-image
WebDesk
New Update
CSK vs PBKS: சி.எஸ்.கே தொடர்ந்து 3-வது தோல்வி

IPL Match 11 CSK vs PBKS Live Score Updates: ஐபிஎல் போட்டிகளின் 11 ஆவது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 3) சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

Advertisment

சென்னை – பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 2 ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இன்று வெற்றி கணக்கை துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

சென்னை அணி விளையாடும் XI: ருதுராஜ், உத்தப்பா, மொயீன் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, சிவம் துபே, ப்ராவோ, ஜோர்டன், பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி

பஞ்சாப் அணி விளையாடும் XI: மயங்க் அகர்வால், தவான், பனுகா ராஜபக்சே, லிவிங்ஸ்டன், ஷாரூக்கான், ஜிதேஷ் ஷர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க அகர்வால் மற்றும் தவான் களமிறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய அகர்வால் இரண்டாவது பந்திலே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவர் முகேஷ் செளத்ரி பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு சிக்சர் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் 9 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக தவாணுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் அற்புதமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக விளையாடி தவாண் 33 ரன்களில் அவுட் ஆனார். 24 பந்துகளைச் சந்தித்த தவான், 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் அடித்து, ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரை சதம் அடித்தார்.

சென்னை பவுலர்களை வெளுந்து வாங்கிய லிவிங்ஸ்டன் 32 பந்தில் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இவர் ஜடேஜா பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த நிலையில் 131 ரன்கள் எடுத்திருந்தது.

3 சிக்சர்கள் விளாசிய ஜிதேஷ் ஷர்மா 26 ரன்களில் அவுட் ஆனார். சிறிது நேரத்திலே ஷாரூக் கான் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராகுல் சாஹர் 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி அடித்து, 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. ரபாடா 12 ரன்களிலும், அரோரோ 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சென்னை அணி தரப்பில், ஜோர்டன் மற்றும் பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சௌத்ரி, ஜடேஜா, ப்ராவோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை பேட்டிங்

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பாவும், ருதுராஜூம் களமிறங்கினர். உத்தப்பா 2 பவுண்டரிகள் அடித்த நிலையில், ருதுராஜ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜை அரோரோ வீழ்த்தினார். அடுத்ததாக உத்தப்பா 13 ரன்களில் அவுட் ஆக, மொயின் அலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய ராயுடு நிதானமாக விளையாட, ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் தாக்கு பிடித்த ராயுடு 13 ரன்களில் வெளியேறினார்.

பின்னர், தோனியுடன் கைகோர்த்த ஷிவம் துபே, அணியை வெற்றிபாதைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். தோனி ஒரு பக்கம் நிதானமான ஆட்டத்தை விளையாட, ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை காட்டினார். வெற்றிக்கணி கொஞ்சம் கொஞ்சமாக சிஎஸ்கே அணியை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில், லிவிங்ஸ்டன் அதனை தட்டிப்பறித்தார். அவரது பந்துவீச்சில் ஷிவம் துபே  57 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தோனி நிதானமாக ஆடினார். களத்தில் தோனி இருந்ததால், எப்படியும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு சிறிதளவு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில், தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.சென்னை அணி 18 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

சென்னை அணி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக தோல்வியை சந்திருப்பது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்  ரவீந்திர ஜடேஜா, தோல்வியில் இருந்து மீண்டும் வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Cricket Csk Vs Pbks
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment