/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-23T184813.961.jpg)
ஐபிஎல் 2023 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோர்
IPL 2023 Kolkata vs Chennai Cricket Match Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 சிக்ஸர்களை பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பிறகு களத்தில் இருந்த டெவோன் கான்வேவுடன் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தார்.
மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் அரைசதம் அடித்த கான்வே 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே - ரஹானே ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்து மிரட்டினர். கொல்கத்தாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள் சிக்ஸர் மழையால் ஈடன் கார்டன் மைதானத்தை குளிர்வித்தனர். ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.
இந்த ஜோடியில் ஷிவம் துபே 50 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 71 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவீந்திர ஜடேஜா 18 ரன்களும் எடுத்தார். அவரது விக்கெட்டுக்குப் பிறகு தோனி களமிறங்கிய நிலையில், ரசிகர்கள் சத்தம் விண்ணைப் பிளந்தது. அவர் 2 ரன்கள் மட்டும் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 236 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜெகதீசன் - சுனில் நரைன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ரின்கு சிங் 53 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணி தரப்பில், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, மதீஷா பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆகாஷ் சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த அசத்தல் வெற்றியின் சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 27ம் தேதி) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:55 (IST) 23 Apr 2023கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 99 ரன்கள் தேவை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 236 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 99 ரன்கள் தேவை.
- 22:25 (IST) 23 Apr 2023அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க திணறும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 236 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் ஒரு ரன்னிலும், சுனில் நரைன் புஜ்ஜிய ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியை விரட்டிய வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னில் அவுட் ஆனார். ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடித்த கேப்டன் ராணா 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
- 21:22 (IST) 23 Apr 2023கொல்கத்தாவில் ரன் மழை; வெளுத்து வாங்கிய சென்னை 235 ரன்கள் குவிப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த டெவோன் கான்வே 56 ரன்களும், ஷிவம் துபே 50 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 71 ரன்களும் எடுத்தனர்.
சிக்ஸர்களை பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 18 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், கொல்கத்தா அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 21:05 (IST) 23 Apr 2023அரைசதம் அடித்த துபே அவுட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். எனினும், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
- 21:04 (IST) 23 Apr 2023ரஹானே அரைசதம்; 17 ஓவர்கள் முடிவில் சென்னை!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் உள்ள துபே - ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஜோடியில் ரஹானே 24 பந்துகளில் அரைசதம் விளாசினார்
17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.
- 21:03 (IST) 23 Apr 2023ரஹானே அரைசதம்; 17 ஓவர்கள் முடிவில் சென்னை!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் உள்ள துபே - ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஜோடியில் ரஹானே 24 பந்துகளில் அரைசதம் விளாசினார்
17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:47 (IST) 23 Apr 2023துபே - ரஹானே அதிரடி ஆட்டம்; 15 ஓவர்கள் முடிவில் சென்னை!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் உள்ள துபே - ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 160 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:33 (IST) 23 Apr 2023கான்வே அவுட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அரைசதம் அடித்த சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 109 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:25 (IST) 23 Apr 2023ஈடன் கார்டனில் கடல் போல் குவிந்திருக்கும் சி.எஸ்.கே ரசிகர்கள்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், போட்டி நடக்கும் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் சி.எஸ்.கே ரசிகர்கள் குவிந்திருப்பது கடல் போல் காட்சியளிக்கிறது.
Ravi Shastri said "It's the sea of yellow in Eden, tribute to one man, he is the King of east, it's MS Dhoni". pic.twitter.com/rdJfwJ52Bb
— Johns. (@CricCrazyJohns) April 23, 2023 - 20:19 (IST) 23 Apr 2023கான்வே அரைசதம்; 10 ஓவர்கள் முடிவில் சென்னை!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசியுள்ளார்.
10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 94 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:08 (IST) 23 Apr 2023ருதுராஜ் அவுட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - கான்வே களமிறங்கினர். இந்த ஜோடியில் 35 ரன்கள் ருதுராஜ் கெய்க்வாட் அவுட் ஆனார்.
7.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 73 ரன்கள் எடுத்துள்ளது.
- 19:46 (IST) 23 Apr 2023களத்தில் ருதுராஜ் - கான்வே; ஆட்டம் இனிதே தொடக்கம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - கான்வே களமிறங்கியுள்ளனர்.
3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி சென்னை அணி 22 ரன்கள் எடுத்துள்ளது.
- 19:11 (IST) 23 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் / விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
- 19:11 (IST) 23 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
- 19:07 (IST) 23 Apr 2023டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்; சென்னை முதலில் பேட்டிங்!
கொல்கத்தாவில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்.
- 18:52 (IST) 23 Apr 2023இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்!
கொல்கத்தா
ஜேசன் ராய், என் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர்/சுயாஷ் சர்மா, நிதிஷ் ராணா (கேட்ச்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி
- 18:51 (IST) 23 Apr 2023இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்:
சென்னை
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு/மதிஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்
- 18:50 (IST) 23 Apr 2023சுயாஷ் ஷர்மாவுக்கு ஓய்வு?
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இளம் லெக் ஸ்பின்னரான சுயாஷ் ஷர்மா இடம்பெறவில்லை. இதற்கிடையில், கொல்கத்தா ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருப்பதால், சுயாஷ் சர்மாவுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. இதுவரை, அவர் 8.50 என்ற எக்கனாமியில் 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- 18:47 (IST) 23 Apr 2023ஷர்துல் தாக்கூர் விளையாடுவாரா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை. அறிக்கைகளின்படி, தாக்கூர் காயம் அடைந்துள்ளார். மேலும் ஈடன் கார்டனில் சிஎஸ்கேக்கு எதிரான இன்றிரவு ஆட்டத்தை நிச்சயமாக இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது.
- 18:46 (IST) 23 Apr 2023மீண்டும் ஸ்டோக்ஸ் வெளியே!
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குதிகால் காயம் காரணமாக மற்றொரு ஐபிஎல் 2023 போட்டியில் இருந்து விலக உள்ளார். சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் சனிக்கிழமையன்று ஸ்டோக்ஸைப் பற்றிய அப்டேட்டை வழங்கினார். ஸ்டோக்ஸ் குணமடைய இன்னும் சில நாட்கள் தேவை என்றும் அணி அவசரப்பட வேண்டிய மனநிலையில் இல்லை என்றும் கூறினார். ஸ்டோக்ஸ் இந்த சீசனின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 18:44 (IST) 23 Apr 2023நேருக்கு நேர்
இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 27 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17ல் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8ல் வெற்றிகளைப் பெற்றுள்ளது.
- 18:14 (IST) 23 Apr 2023சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா?
நடப்பு சீசனில் கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியைக் (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணி போராடும்.
- 18:09 (IST) 23 Apr 2023ஆதிக்கத்தை தொடருமா சென்னை?
நடப்பு சீசனில் சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.
பேட்டிங்கில் டிவான் கான்வே (258 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (235 ரன்கள்), ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரானா, ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனாவும் வலுசேர்க்கிறார்கள்.எனவே, இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணி ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கலாம்.
- 17:34 (IST) 23 Apr 2023‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சி.எஸ்.கே – கே.கே.ஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.