சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ் தோனி, “கேப்டன் கூல்” எனப் புகழ் பெற்றவர். விளையாட்டு மைதானத்திலும் சரி, பயிற்சியிலும் சரி எப்போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர். ஏராளமான ரசிகர்களின் மனதை வென்றவர். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ஜாம்பவான்களையும் வென்றவர்.
சி.எஸ்.கே அணி தோற்றாலும், ஜெயித்தாலும் தோனி எப்போதும் சி.எஸ்.கே அணியின் செல்லப்பிள்ளை. இப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி தனது அணி வீரர்கள் முன் அழுதார் என்பதை நம்ப முடிகிறதா? முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர், முன்னாள் சி.எஸ்.கே அணி வீரர் ஹர்பஜன் சிங், தோனி அழுத தருணத்தை நினைவு கூர்ந்து பேசினார்.
முன்னாள் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருடனான உரையாடலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு ஹர்பஜன் பேசுகையில், “நான் இங்கு பகிர்ந்து கொள்ள ஒரு கதை உள்ளது. 2018-ல் 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சி.எஸ்.கே அணி மீண்டும் ஐ.பி.எல்லுக்கு திருப்பியபோது, அணி வீரர்களுடனான இரவு விருந்து இருந்தது. ‘ஆண்கள் அழுக மாட்டார்கள்’ என்ற பழமொழியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அன்று இரவு எம்.எஸ் தோனி அழுதார். உணர்ச்சி வசப்பட்டார். இது பற்றி யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி தானா இம்ரான்?”
இது அவரது குடும்பம்
“ஆம், நிச்சயமாக” என்று தாஹிர் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “நான் கூட அங்கு இருந்தேன். இது அவருக்கு (எம்.எஸ். தோனி) மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அப்படி அவரைப் பார்க்கும்போது இந்த டீம் அவர் மனதுக்கு எந்தளவுக்கு நெருக்கமானது என்று தெரிந்தது. அவர் அணியை தனது குடும்பமாக நினைக்கிறார். நம் அனைவருக்கும் அது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது” என்றார்.
ஹர்பஜன் கூறுகையில், “2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து அந்த சீசனில் கோப்பையை வென்றோம். பலரும் அணியை ‘புத்தே’ (வயதானவர்கள் உள்ள அணி) என்ற குறிச்சொல்லைக் கொடுத்தபோது, நாங்கள் கோப்பையை வென்றோம். நான் அப்போது அணியில் இருந்தேன். அந்த வெற்றிக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
இறுதிப் போட்டிக்கு நுழைந்த சி.எஸ்.கே
இந்நிலையில் நேற்று (மே 23) செவ்வாய்க் கிழமை ஐ.பி.எல் 16வது சீசன் பிளேஆஃப் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10-வது முறையாக இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியது. இது வரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் சென்னை அணி குஜராத்தை வெற்றி பெற வில்லை. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“