இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் வலம் வருகிறது. எனினும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி கடந்த சீசனில் நடந்த 14 போட்டிகளில் 4ல் வெற்றி 10ல் தோல்வி என பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்துடன் விடைபெற்றது. இதனால், இந்த சீசனில் எழுச்சி பெற அந்த அணி தரமான வீரர்களை மினி ஏலத்தில் வாங்கியது. அதன்படி, ஆஸ்திரேலிய வீரரர்களான கேமரூன் கிரீனை ரூ.17.5 கோடிக்கும், ஜெய் ரிச்சர்ட்சனை ரூ.1.5 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.
மும்பை அணியின் முன்னணி வீரர் கீரன் பொல்லார்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற மூத்த மற்றும் நம்பகமான வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் இளம் வீரர் இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்களும் உள்ளனர். வேகப்பந்துவீச்சத்திற்கு பும்ராவுடன் டேனியல் சாம்ஸ் மற்றும் ரிலே மெரிடித் உள்ளனர்.எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் களமிறங்க தயாராகி வருகிறார். சுழல் யூனிட் என்று வரும்போது, முருகன் அஷ்வினைத் தவிர வேறு வழிகள் அவர்களிடம் இல்லை.