"நான் 14 வயதில் கபடி விளையாடி இருக்கிறேன்" என்று சொல்கிறார் 60 வயதான ரஃபீக். ஹைதராபாத்தில் கார் டிரைவராக இவர் பணிபுரிந்து வருகிறார். "அப்போதெல்லாம் ஹைதராபாத்தில் ஒவ்வொரு நகரத்தின் மூலை முடுக்குகளிலும் கபடி விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும்" என்கிறார் ரஃபீக்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கபடி தொடரில், இந்திய ஆண்கள் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், கபடியின் தாயகம் தமிழ்நாடு என்று நம்பப்படுகிறது.
இப்போதும் கூட, தென்னிந்திய மாநிலங்கள், திறமையான ஒரு கபடி வீரரை தேடிக் கொண்டுத் தான் இருக்கின்றன. ரஃபீக்கை பொறுத்தவரை, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் நிறைய இடங்களில் கபடி விளையாட்டு மிகவும் நேசிக்கப்பட்டு விளையாடப்படுகிறது. ஆனால், அனுப் குமார் போன்றோ, அஜய் தாக்குர் போன்றோ, அல்லது ராகுல் சௌத்ரி போன்றோ ஒரு சிறந்த வீரரை நாம் அடையாளம் காண முடியாமல் இருப்பதற்கு ஒரு அடிப்படை காரணத்தை அவர் தெரிவிக்கிறார்.
"என்னுடைய காலங்களில், தொழில் ரீதியாகவும் கபடி விளையாடப்படுகிறது என்பது வெகு காலத்திற்கு எங்கள் யாருக்குமே தெரியாது" என்றார். மேலும், பலருக்கும் இந்தியாவுக்கு கபடி விளையாட்டில் தேசிய அணி இருக்கிறது என்றே தெரியாது. கிரிக்கெட் பற்றித் தான் எங்களுக்குத் தெரியும்.
'சிறந்த கபடி வீரர்கள் உருவாக்க ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஆற்றல் இருக்கிறதா?' என்று கேள்வி எழுப்பும் ரஃபிக், "இங்கே நிறைய சிறுவர்கள் கபடியை மிகவேகமாக விளையாடுகிறார்கள். ஹைதராபாத்தின் கிராமப்புற மற்றும் உள்நகர்ப்புற பகுதிகளில் நீங்கள் ஆகச்சிறந்த கபடி வீரர்களை கண்டறிய முடியும்' என்கிறார்.
இப்போது நாம் பார்க்கும் புரோ கபடி லீக் தொடரில், நிறைய வீரர்கள், கோட்டைத் தாண்டி ரெய்டு செல்லும் போது, வெவ்வேறு விதமாக பாடுகின்றனர், இந்தியாவின் நிறைய பகுதிகளில், வீரர் ரெய்டு செல்லும் போது, "ஹூ-து-து" என்றே பாடுகிறார். அதைத் தான் அந்தப் போட்டிக்கு பெயராகவும் அவர்கள் வைத்துக் கொண்டு விளையாடி வருகின்றனர். கபடி எனும் பெயரைத் தவிர்த்து, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இப்போட்டியை செடுகுடு/சடுகுடு என்றும் அழைக்கின்றனர். தமிழகத்தின் சில பகுதிகளிலும் சடுகுடு என்றே இப்போட்டியை அழைக்கிறார்கள்.
'புரோ கபடி தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் பரிசுக்காகவும், கோப்பைக்காகவும் தான் விளையாடுகிறார்கள்' என கூறும் ரஃபிக், 'எங்கள் காலங்களில் கபடி இவ்வளவு பரிசுகளைத் தரும் என்று நினைத்து விளையாடவில்லை. பொழுதுபோக்கிற்காக மட்டுமே விளையாடினோம். என்னை 'பாறை மனிதன்' என்று தான் அழைப்பார்கள். ஏனெனில், என்னை யாராலும் அவுட் செய்ய முடியாது' என்றார்.
'இனி கபடி விளையாட்டிலும் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை அனைவரும் உணர்வார்கள்' என்று கூறி முடித்தார் ரஃபீக்.