ஐ.பி.எல். சூதாட்டம் : ஸ்ரீசாந்துக்கு தடையை நீக்கியது நீதிமன்றம்

நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கியது. இதன் மூலமாக மீண்டும் ஐ.பி.எல்., ரஞ்சி போட்டிகளில் இடம்பெறும் வாய்ப்பை ஸ்ரீசாந்த் பெறுவார்.

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடையை கேரள நீதிமன்றம் நீக்கியது.

இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரளாவை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல். அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அப்போது அந்த அணியில் இடம்பெற்ற ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் மீது சூதாட்டப் புகார்கள் எழுந்தன. இதில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே டெல்லி உயர்நீதிமன்றம் இவர்களை விடுவித்தது.

ஆனாலும் சூதாட்டப் புகாரை தொடர்ந்து இவர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள் கால தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் விலக்கிக் கொள்ளவில்லை. காரணம், கிரிக்கெட் வாரிய கமிட்டி நடத்திய விசாரணையில் இவர்கள் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் கூறி வந்தது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்ட நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கியது. இதன் மூலமாக மீண்டும் ஐ.பி.எல்., ரஞ்சி போட்டிகளில் இடம்பெறும் வாய்ப்பை ஸ்ரீசாந்த் பெறுவார். அதில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பெறலாம். அதையெல்லாம் தாண்டி, தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து முழுமையாக விடுதலையான பெருமித உணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது.

தனது விடுதலை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த், ‘கடவுள் மிகப் பெரியவர்! என் மீதான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!’ என கூறியிருக்கிறார் ஸ்ரீசாந்த்.

×Close
×Close