Advertisment

U-17 உலகக்கோப்பை கால்பந்து: வரலாற்றை திருத்தி எழுதி இங்கிலாந்து சாம்பியன்!

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
U-17 Football Worldcup, England Champion

U-17 Football Worldcup, England Champion

இந்தியாவில் கடந்த 6-ஆம் தேதி முதல் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதில், இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Advertisment

இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. ஜூனியர் உலக கோப்பையில் இரு ஐரோப்பிய அணிகள் மோதியது இதுவே முதல் நிகழ்வாகும்.

66,684 ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பான இறுதி ஆட்டம் இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கதில் ஸ்பெயின் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த அணியின் செர்ஜியோ கோமஸ் 10-வது மற்றும் 31-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் 2-0 என ஸ்பெயின் முன்னிலைப் பெற்றிருந்தது.

முதல் பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் 44-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பிரேவ்ஸ்டர் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என ஸ்பெயின் முன்னிலைப் பெற்றிருந்தது.

ஆட்டத்தின் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அந்த அணியின் கிப்ஸ் ஒயிட் 58-வது நிமிடத்திலும், ஃபொடேன் 69-வது நிமிடத்திலும், குயெஹி 84-வது நிமிடத்திலும் கோல் அடிக்க இங்கிலாந்து 5-2 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 5-2 என வெற்றி பெற்று 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது.

32 ஆண்டு கால ஜூனியர் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், இங்கிலாந்து அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். தோல்வியே சந்திக்காமல் கோப்பைக்கு முத்தமிட்ட இங்கிலாந்து அணி, இந்த கோப்பையை வென்ற 9–வது அணியாக பட்டியலில் இணைந்தது.

அதே சமயம் 1991, 2003, 2007–ம் ஆண்டுகளிலும் இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றிருந்த ஸ்பெயினுக்கு இந்த முறையும் சோகமே மிஞ்சியது. இதன் மூலம் கோப்பையையே வெல்லாமல் அதிக தடவை 2–வது இடத்தை பிடித்த அணியாக ஸ்பெயின் (4 முறை) திகழ்கிறது. நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் பிரிஸ்டர் (8 கோல்) தங்க ஷூவை தட்டிச்சென்றார்.

பிரேசில் - மாலி அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் பிரேசில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டி ஒன்றை இந்தியா நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த ஜூனியர் உலக கோப்பையில் 52 ஆட்டங்களில் 179 கோல்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக கோல்கள் பதிவான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடராக இது அமைந்தது. இதற்கு முன்பு 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த உலகக்கோப்பையில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக கோல் எண்ணிக்கையாக இருந்தது. மேலும் இந்த உலகக் கோப்பையை 6 நகரங்களில் ஏறக்குறைய 13 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அதிக ரசிகர்கள் கண்டுகளித்த உலகக் கோப்பை தொடரும் இது தான்.

தொடரை இந்தியா நடத்தியபோதும், இந்திய அணி லீக் சுற்றோடு தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Brazil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment