ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், புனேவை 1 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, மும்பை இந்தியனஸ் அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
டாஸ் வென்று எந்தவித யோசனையும் இன்று ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பார்திவ் படேலும், சிம்மன்ஸும் களமிறங்க, உனட்கட்டும், வாஷிங்டன் சுந்தரும் மிக நேர்த்தியாக முதல் 5 ஓவரை வீசினர். மும்பை, இந்த ஐந்து ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதற்கிடையில் சிம்மன்ஸை 3 ரன்னிலும், பார்த்திவ் படேலை 4 ரன்னிலும் தனது ஒரே ஓவரில் வெளியேற்றினார் உனட்கட். அதன்பின், மும்பையின் ஆட்டம், ஆட்டம் காண ஆரம்பித்தது.
அம்பத்தி ராயுடுவை தனது துல்லியமான த்ரோவால் ஸ்மித் ரன் அவுட் செய்ய, ரோஹித் 24 ரன்னிலும், பொல்லார்ட் 7 ரன்னிலும் ஆடம் ஜம்பா பந்துவீச்சு சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினர். தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யாவை கிறிஸ்டியன் எல்பிடபிள்யூ ஆக்கினார். இதனால் மும்பை அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து செய்வதறியாது திகைத்தது. பின்னர் 8-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த க்ருனல் பாண்ட்யா மற்றும் மிட்சல் ஜான்சன் தங்களால் அணிக்கு முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்தனர்.இருவரும் சேர்ந்து எட்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் திரட்டினார்.
முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக க்ருனல் பாண்ட்யா 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். உனட்கட், ஜம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். (நல்ல எதிர்காலம் இருக்கு ப்ரோ!)
இத்தொடரோடு ஐபிஎல்-ல் இருந்து விடைபெறவுள்ள புனே அணி, எப்படியாவது இந்த எளிதான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், மிக நிதானத்துடன் தனது இன்னிங்ஸை தொடங்கியது புனே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தவறாக எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்ட திரிபாதி, 3 ரன்களுடன் ஏமாற்றத்துடன் வெளியேறினார். சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திய ரஹானே 44 ரன்களில் அவுட்டானார். அதன்பின் ஜோடி சேர்ந்த தோனி – ஸ்மித் கூட்டணி ஏதுவாக வந்த பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டியது. ஆனால், நீண்ட நேரம் நிலைக்காத தோனி, 10 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இதையடுத்து, கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜான்சன் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் திவாரி பவுண்டரி அடிக்க, 2 -வது பந்தில் எல்லைக்கோட்டில் கேட்ச்சானார். இதனால், மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 3-வது பந்தை சந்தித்த ஸ்மித், ஆஃப் சைடில் சிக்ஸ் அடிக்க முயல, அம்பத்தி ராயுடு அதை சிறப்பாக கேட்ச்சாக்கினார். இதனால், 51 ரன்களுடன் ஸ்மித் ஏமாற்றத்துடன் வெளியேறினார். பின், 4-வது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, 5-வது பந்தை எதிர்கொண்ட கிறிஸ்டியன் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மீண்டும் 2 ரன்களே எடுத்தார் கிறிஸ்டியன். இதனால், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றியை ருசித்தது.
எளிதான இலக்கு அமைந்தும் புனே அணி தனது வெற்றியை தவறவிட்டு, ஐபிஎல் தொடரில் இருந்து சோகமாக வெளியேறியது.