நேஷனல் கேம்ஸ் 2022: தங்கம் வென்ற பவானிதேவி… சாதனையை முறியடித்து அசத்திய பிரவீன் சித்ரவேல்!
2022 National Games of India Tamil News: ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில், தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
Praveen Chithravel - Bhavani Devi Tamil News: 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் போட்டியில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisment
சாதனை படைத்த தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல்
இந்நிலையில், தடகளத்தில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இந்த போட்டியில் 2015-ம் ஆண்டு ரஞ்சித் மகேஷ்வரி 16.66 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.
தற்போது அதனை முறியடித்து அசத்தியுள்ளார் பிரவீன். இந்த போட்டியில் கேரளாவின் ஏ.பி.அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் (16.08 மீட்டர்), பஞ்சாப்பின் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் (15.97 மீட்டர்) கைப்பற்றினர்.
21 வயதான பிரவீன் திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார்.
தங்க மங்கை பவானிதேவி
ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குரிய பெருமையை பெற்ற தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார். இதன் ஆண்கள் பாயில் பிரிவில் தமிழக வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
தங்கம் வென்ற இளவேனில்
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் வீராங்கனை இளவேனில் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். இளவேனில் குஜராத் அணிக்காக களம் இறங்கினாலும் அவரது சொந்த ஊர் கடலூர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
பதக்கப்பட்டியல் விபரம்
பதக்கப்பட்டியலில் மேற்கு வங்காளம் 5 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 11 பதக்கத்துடன் முதலிடத்திலும், அரியானா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 2 தங்கம், 4 வெண்கலம் வென்று 6 பதக்கத்துடன் 8-வது இடம் வகிக்கிறது.