ஆஸ்திரேலியாவின் பிரபல டி20 தொடரான பிக் பேஷ், கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்தியாவில் ஐபிஎல் போன்று, ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் என்று சொல்லலாம்.

அந்த பிக் பேஷ் தொடரில், டாஸ் முறையை மாற்றுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் கிம் மெக்கோனி தெரிவித்துள்ளார்.

அதாவது, இனி காயின் கொண்டு டாஸ் போடாமல், பேட் மூலம் டாஸ் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாடும் இரு அணிகளின் கேப்டன்களில் ஒருவர் பேட்டை சுழற்றுவார். 'மேடு' அல்லது 'சமம்' என்ற இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். பேட்டின் மேடுப் பகுதி அல்லது சமப் பகுதி என இரண்டில் ஏதாவது ஒன்றை கேப்டன் தேர்வு செய்யலாம்.

இது குறித்து கிம் கூறுகையில், "இது எனக்கு மிகச் சிறந்த தருணம். இதற்காக எங்களது பேட் தயாரிக்கும் நிறுவனமான 'கூகபுரா'வைச் சேர்ந்த நண்பர்களிடம் பேசி ஆலோசனை செய்து, டாஸ் போடுவதற்கு ஏற்ப பேட் தயாரித்து, அதனை சோதனை செய்து பார்த்திருக்கிறோம்.

இது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். சிலர் இந்த முறை பிடிக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், மக்களிடம் நான் சவால் விட்டு கேட்கிறேன், 'இதற்கு முன் எப்போது Coin மூலம் டாஸ் போடும் போது, அதனை ஆர்வமுடன் பார்த்து இருக்கிறீர்கள்?'. ஆனால், இந்த புதிய முறை நிச்சயம் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள பிக் பேஷ் தொடரில் இருந்து இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

நாம் நமது இளவயது காலங்களில் கிரிக்கெட் ஆடும் போது, 'கல்லா, மண்ணா' , 'In-ன்னா, Out-ட்டா' என பல மாடுலேஷனில் டாஸ் போட்டு விளையாடியிருப்போம். தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமே இதுபோன்றதொரு டாஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதில், ஆச்சர்யமான தகவல் என்னவெனில், இந்த பேட் மூலம் டாஸ் போடும் முறை ஆஸ்திரேலியாவின் பழமையான கிரிக்கெட் பழக்கம் என்பது தான்.