புரோ கபடி லீக் 7வது தொடரின் சென்னை சுற்று ஆட்டம் இன்று (17ம் தேதி) முதல் துவங்குகிறது. முதல் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
புரோ கபடி தொடரின் 7வது சீசன், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கியது. தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று (132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.
மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ஐதராபாத், மும்பை, பாட்னா, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக சென்னையில், இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
வரும் 23ம் தேதிவரை, சென்னையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியும், ஒரு டையும் கண்டுள்ளது. இன்று (17ம் தேதி) நடக்கும் முதல் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி பங்கேற்கும் போட்டிகள்
ஆகஸ்ட் 17 : தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ்
ஆகஸ்ட் 18 : தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன்
ஆகஸ்ட் 21 : தமிழ் தலைவாஸ் - பிங்க் பாந்தர்ஸ்
ஆகஸ்ட் 23 : தமிழ் தலைவாஸ் - யு மும்பா
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.150, ரூ.300, ரூ.1,250, ரூ.2,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. insider என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.