தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கபடி விளையாட்டுக்காக புரோ கபடி போட்டிகள் நடத்தப்படுகிறது. கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது
புரோ கபடி சீசன் 9 லீக் போட்டிகளில் மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
புரோ கபடி சீசன் 9 லீக் போட்டிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, சுரிந்தர் சிங் தலைமையிலான முன்னாள் சாம்பியன் யு மும்பாவுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே தபாங் டெல்லி அணி புள்ளிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில், தபாங் டெல்லி 41 புள்ளிகளும் யூ மும்பா அணி 27 புள்ளிகளும் பெற்றிருந்தன. இதன் மூலம் டெல்லி அணி வெற்றி பெற்றது.
2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கடுமையாக சமபலத்துடன் விளையாடியது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 17-17 என்ற கணக்கில் சம அளவில் புள்ளிகள் பெற்றிருந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில், பெங்களூரு அணி 17 புள்ளிகளை பெற, தெலுங்கு அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதையடுத்து 34-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கபடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி இன்று (அக்டோபர் 8) விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் மோதுகிறது. பெங்களூரு கண்டிவாரா உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் சனிக்கிழமை (அக்டோபர் 8) இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
மற்றொரு ஆட்டத்தில், பாட்னா - புனே அணிகளும், பெங்கால் - அரியானா அணிகளும் விளையாடுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"