வங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான்! ரஷித்தின் பலம் என்ன? ஒரு பார்வை

ரஷித் ஒரு டாப் டி20 பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்

ஆசைத் தம்பி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ரஷித் கான் கலக்கு கலக்கு என கலக்கி இருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஷித், கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டி20 போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை தொடர்ந்து மிரட்டி வருகிறார். விராட் கோலி, டி வில்லியர்ஸ், தோனி என மிகப்பெரும் ஆளுமைகளை ‘ஆலுமா டோலுமா.. அப்டிக்கா ஓரமா போம்மா’ என்று அசால்ட்டாக இந்த ஐபிஎல்-லில் அலற விட்டார். அதிலும், பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு மேட்சின் போதும், ரஷித் கான் பந்தை யாரும் தொட வேண்டாம் என
சிஎஸ்கே கேப்டன் தோனி, சக வீரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கும் அளவிற்கு மிரட்டிக் கொண்டிருந்தார் ரஷித்.

தற்போது அதே ஃபார்மோடு, நேற்று நடந்த டி20 போட்டியில் வங்கதேசத்தை அடக்கம் செய்திருக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19 ஓவர்களில் வெறும் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதில் 3 ஓவர்கள் வீசிய ரஷித் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அள்ளினார். விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீமையும், அதிரடி வீரர் சபீர் ரஹ்மானையும் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்த ரஷித், மொசாடெக் ஹொசைனையும் அவுட்டாக்கினார்.

கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்த வங்கதேசத்தை ரஹீம், சபீர் என இருபெரும் தலைகளை அடுத்தடுத்து உருட்டி வெற்றியை வங்கதேசத்திற்கு பெற்றுத் தந்தார் ரஷித் கான். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ‘ரஷித் ஒரு டாப் டி20 பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என கூறியதை கனக்கச்சிதமாக மீண்டும் நிரூபித்துள்ளார்.

விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்மாக இருக்கிறது. அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்தவர் டி வில்லியர்ஸ் எனலாம். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

ஆனால், 19 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல.. அடிலைட் ஸ்டிரைகர்ஸ், கொமில்லா விக்டோரியன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், காபுல் ஈகிள்ஸ், சைன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் என்று உலகம் சுற்றும் வாலிபனாக மிக பிசியாக, அதே சமயம் வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரஷித். செல்லும் அனைத்து இடங்களிலும் தனது விக்கெட் பசியை தீர்த்துக் கொள்கிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும். அதற்கான நேரமும் ஏற்கனவே கனிந்துவிட்டது எனலாம்.

×Close
×Close