scorecardresearch

இரண்டு அரைசதம் அடித்ததற்காக அல்ல… அந்த தில்லுக்கு தான் மதிப்பே! க்ளீயரான ‘நம்பர் 4’ ஸ்பாட்!

விக்கெட்டுகளை இழந்து அணி இக்கட்டான சூழலில் தடுமாறிய போது, இவர் காட்டிய மெச்சூர்ட் இன்னிங்ஸ் தான் பிசிசிஐ மனதை குளிர வைத்திருக்கிறது

Ravi shastri about shreyas iyer no.4 spot indian cricket team - இரண்டு அரைசதம் அடித்ததற்காக இல்லை... அந்த தில்லுக்கு தான் மதிப்பே! க்ளீயரான 'நம்பர் 4' ஸ்பாட்!
Ravi shastri about shreyas iyer no.4 spot indian cricket team – இரண்டு அரைசதம் அடித்ததற்காக இல்லை… அந்த தில்லுக்கு தான் மதிப்பே! க்ளீயரான 'நம்பர் 4' ஸ்பாட்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன் வைக்கப்பட்ட, வைக்கப்பட்டுள்ள, வைக்கப்படும்(?) மிகப்பெரிய டாஸ்க், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நம்பர்.4 பேட்ஸ்மேன் யார் என்பது.

குறையில்லாத ஷிகர் தவான், ரோஹித் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், ஒன் டவுன் பேட்ஸ்மேன் கோலியின் ‘ஒன்டர் மேன்’ பேட்டிங், சுமாரான லோ ஆர்டர் என்று ஓரளவு பேலன்ஸாக களமாடி வரும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு, நான்காம் நிலை வீரர் கிடைப்பது மட்டும், சென்னைக்கு மழை கிடைப்பது போல் அரிதாகிப் போனது.

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பல்லிளிக்கத் தொடங்கிய 4th டவுன் ஸ்பாட்டுக்கு 2019 உலகக் கோப்பை வரை விடிவு காலம் பிறக்கவில்லை. மனீஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், தோனி, விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட் என பல வீரர்களை முயற்சி செய்து பார்த்தும், முழுமையான திருப்திப்படக்கூடிய ரிசல்ட் கிடைக்கவில்லை.

நாளுக்கு நாள் இந்த பிரஷர் அதிகரிக்க, கோச் ரவி சாஸ்திரிக்கு நெருக்கடி அதிகரித்தது. கேப்டன் கோலிக்கும் தான். ஆனால், அவர் தனது பேட்டிங்கால் அணியின் சமநிலையை கோழி அடை காப்பது போல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தார். எப்போது கோலியும், இந்திய ஓப்பனிங்கும் தடுமாறுகிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவுக்கு பரிதாபகரமான முடிவுகளே அரங்கேறியது. அவ்வப்போது, தன்னால் முடிந்த இன்னிங்ஸை தோனி வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், யாருமே கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டிருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான்காம் நிலை வீரருக்கான நம்பிக்கையை முதன் முதலாக கண்டிருக்கிறது பிசிசிஐ.

ஷ்ரேயாஸ் ஐயர்…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில், நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளித்து அரைசதம் அடித்து, தனியாக போராடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலிக்கு கைக் கொடுத்து, அணியின் வெற்றிக்கும் உதவி, 4th ஸ்பாட் வெற்றிடத்திற்கான மிகப் பெரிய பதிலை உரக்க கொடுத்திருக்கிறார்.

இரு அரைசதம் அடித்ததற்காக மட்டும் அவர் மீது இவ்வளவு நம்பிக்கை உருவாகவில்லை. விக்கெட்டுகளை இழந்து அணி இக்கட்டான சூழலில் தடுமாறிய போது, இவர் காட்டிய மெச்சூர்ட் இன்னிங்ஸ் தான் பிசிசிஐ மனதை குளிர வைத்திருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “நீண்ட காலத்திற்கு சிறப்பாக விளையாடும் அளவிற்கான இந்திய அணியை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். அதில், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய இளம் மற்றும் அபாரமான திறமைசாலிகள் இடம் பெற்றிருப்பார்கள். ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, மாயங்க் அகர்வால், விஜய் ஷங்கர் ஆகியோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிலையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நான்காம் இடத்துக்கான வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து களம் இறக்கப்படுவார். வரும் காலங்களில் நிறைய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ravi shastri about shreyas iyer no 4 spot indian cricket team