Advertisment

எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு - கங்குலி

ஒருவரை நாட்டுக்காக விளையாட அணியில் தேர்வு செய்கிறோம் என்றால், எத்தனை முறை தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதே முக்கியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rishabh Pant

ஆசை தம்பி

Advertisment

அடுத்த யுவராஜ் சிங், அடுத்த தோனி என்ற இரு பெரும் ஆளுமைகளை ஒத்த எதிர்கால தயாரிப்பாக அறியப்படுபவர் ரிஷப் பண்ட். உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியைச் சேர்ந்த இந்த 20 வயதே ஆன 'சிறுவன் கம் இளைஞன்' இன்று அடிக்கும் அடி, யுவராஜ் சிங்கையும், தோனியையம் கலந்த கலவையாக நமக்கு நினைவூட்டுகிறது. சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுக்க வேண்டும் என கூறும் ரிஷப் பண்ட், இடது கை ஆட்டக்காரர். அதனால் தான் யுவி + தோனி காம்பினேஷனாக பார்க்கப்படுகிறார்.

இந்த ஐபிஎல்லில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடியுள்ள பண்ட், 521 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், மூன்று அரைசதமும் உள்ளடங்கும். ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தனி ஆளாக 63 பந்துகளில் 128 ரன்களை விளாசியது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையே திருப்திக்கு உள்ளாக்கியது. இந்தியன் டீமுக்கு அடுத்த ஆள் ரெடி என்று மகிழ்ந்தனர். எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்பதே நித்தமும் அவரது நினைப்பாக இருக்கிறது என்பது அவரது ஒவ்வொரு ஷாட்டிலும் தெரிகிறது. ஷாட் தேர்விலும் தெரிகிறது. ஸ்கூப், புல் ஷாட், ஹூக் ஷாட் என அனைத்து விதமான ஷாட்களையும் ஆடுவது அவரது மிகப்பெரிய பலம் என்று கூறலாம். வெறும் அதிரடி என்று மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ட் பேட்ஸ்மேன் போன்றே விளாசுகிறார்.

இப்படி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட்டிற்கு, பிசிசிஐ அறிவித்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அணியில் இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அதேசமயம், ரிஷப் குறித்தும் அவர் ஏன் இப்போதைக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்தும், இந்திய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் உள்ளவரும், ரசிகர்களால் 'தாதா' என்று அழைக்கப்படுபவருமான சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து இங்கே பார்ப்போம். கங்குலி கூறுகிறார், "ரிஷப் இந்தியாவின் எதிர்காலம் என நினைக்கிறேன். அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. ரிஷப் மட்டுமல்ல, இஷான் கிஷனுக்கும் இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். இன்னும் நிறைய காலம் இருக்கிறது அவர்களுக்கு. இன்னும் அவர்கள் முதிர்ச்சியடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் அவர்கள் பக்குவப்படும் நேரத்தில், தானாகவே வாய்ப்பு அவ்ர்களைத் தேடி வரும்.

ஆனால் ஒன்று... கன்சிஸ்டன்சி என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். சும்மா ஒரு மேட்சில் அடித்துவிட்டு, உட்கார்ந்து இருக்கக் கூடாது. அவர்கள் இருவரும், இதனை கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். ஒருவரை நாட்டுக்காக விளையாட அணியில் தேர்வு செய்கிறோம் என்றால், எத்தனை முறை அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே முக்கியமாக பார்க்கப்படும். டி20 என்பது வேறு வடிவிலான கிரிக்கெட். இங்கு வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

ஹைதராபாத் அணிக்கு எதிராக பண்ட் ஆடியதை பார்க்கையில், எனக்கு 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடிய மெக்குல்லம், பெங்களூரு அணிக்கு எதிராக 73 பந்தில் 158 ரன்கள் விளாசியது தான் நினைவுக்கு வந்தது. அப்போது மெக்குல்லம் ஆட்டத்தை, எதிர் ஸ்டிரைக்கில் நின்றிருந்த நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அதேபோன்றதொரு, ஆட்டத்தை ரிஷப் பண்ட்டிடம் நான் பார்த்தேன்.

இப்போதைக்கு, அணியில் தோனி இருக்கிறார். இந்த தருணத்தில், தோனிக்கு மாற்றாக நீங்கள் யாரையும் களமிறக்க முடியாது. தினேஷ் கார்த்திக்கும் அணியில் இருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில், தோற்கும் தருவாயில் இருந்த இந்திய அணியை, அவர் வெற்றி பெற வைத்ததை மறக்கவே முடியாது. எனவே, இளம் வீரர்கள் சரியான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்" என்றார்.

Ipl Rishabh Pant Ganguly Aasai Tambi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment