Rishabh Pant Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இவர் சமீபத்தில் நடந்த முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். குறிப்பாக, டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்த ஆட்டத்தில் 104 பந்துகளில் பண்ட் 93 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 2-0 என கணக்கில் கைப்பற்றியது.
தோனியுடன் கிறிஸ்துமஸ் பார்ட்டி

பண்ட், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு துபாய் பறந்தார். அங்கு தோனி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கழிக்க ஏற்கனவே சென்றிருந்த நிலையில், அவர்களுடன் பண்ட் இணைந்து கொண்டார். துபாயில் உள்ள சுஷிசாம்பா உணவகத்தில் தோனி, பண்ட் மற்றும் சில நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் புகைப்படத்தை சாக்ஷி தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது.
கார் விபத்தில் சிக்கி பண்ட்
தொடர்ந்து தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், தனது சொந்த வீட்டில் புத்தாண்டைக் கொண்டாடவும் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்குச் சென்றுள்ளார் ரிஷப் பண்ட். அவர் டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் பண்ட் படுகாயம் அடைந்தார்.

இது தொடர்பாக மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “பண்டுக்கு நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது, வலது மணிக்கட்டு, கால், முதுகு மற்றும் கணுக்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ” என்று தெரிவித்துள்ளது.
“அவரது உடல்நிலை எலும்பியல் துறையின் டாக்டர் கௌரவ் குப்தாவால் கண்காணிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படாமல் பண்ட் சீராக இருக்கிறார். அவருடைய அம்மா அவருடன் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று பண்ட்டை கவனித்து வரும் மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரில் பண்ட் இல்லை? டெல்லி கேபிட்டல்சுக்கும் பின்னடைவு
எய்ம்ஸ்-ரிஷிகேஷில் உள்ள விளையாட்டு காயம் பிரிவை கவனித்து வரும் டாக்டர் கமர் ஆசம், பண்டின் காயங்களின் தீவிரம் குறித்து பேசுகையில், “பண்ட் தனது தசைநார் காயத்தில் இருந்து மீள குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். அது கடுமையானதாக இருந்தால், அவருக்கு அதிக நேரம் எடுக்கலாம். அவரது விரிவான காயம் அறிக்கையின் அடிப்படையில் மேலும் மதிப்பீடு செய்யலாம்.” என்று கூறியுள்ளார்.

வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வரும் பண்ட் அந்த தொடரில் விளையாட உடற்தகுதியை எட்டியிருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் அந்த அணியை வழிநடத்த தயாராக இருப்பாரா? என்பது போன்ற தொடர் கேள்விகளும் எழுகின்றன. மேலும், டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil