டாப் – 5க்குள் இடம் பிடித்த ரோஹித் ஷர்மா! சாஹல் 28 இடங்கள் முன்னேற்றம்!

இந்திய அணியின் தொடக்க வீரரும் தற்காலிக கேப்டனுமான ரோஹித் ஷர்மா இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி வென்ற பிறகு, MRF Tyres ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இந்திய அணியின் தொடக்க வீரரும் தற்காலிக கேப்டனுமான ரோஹித் ஷர்மா இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், முதன் முறையாக 800 புள்ளிகளை கடந்து அசத்தியுள்ளார். இரண்டாவது போட்டியில் இரட்டை சதம் விளாசிய பின்னர், 825 புள்ளிகள் பெற்ற ரோஹித், தற்போது 816 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்து ஐந்தாவது இடத்தை கைப்பற்றியுள்ளார். முன்னதாக, கடந்த 2016 பிப்ரவரி மாதத்தில், தனது கரியர் பெஸ்ட்டான 3-ஆம் இடத்தை ரோஹித் ருசித்திருந்து குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான், ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றபடி, தரவரிசையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 876 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இலங்கை தொடரில் மொத்தம் 6 விக்கெட்டு வீழ்த்திய லெக் ஸ்பின்னர் சாஹல், 23 இடங்கள் முன்னேறி, 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தையும், ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இருவருக்கும் இது தான் அவர்களது சிறந்த ஒருநாள் தரவரிசையாகும்.

இலங்கை அணியில், உபுல் தரங்கா 15 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தையும், நிரோஷன் டிக்வெல்லா 7 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பவுலிங்கில், வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் 14 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், ஆல் ரவுண்டர் மேத்யூஸ் 9 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அணிகள் தரவரிசையை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. இலங்கைக்கு எதிரான தொடரில் 3-0 என இந்தியா வென்றிருந்தால், தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்க முடியும். ஆனால், தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rohit sharma moves into top five in odi rankings

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com