ரசிகரை தாக்கியதற்காக வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஒப்பந்தம் ரத்து!

வங்கதேச கிரிக்கெட் அணியின் சபீர் ரஹ்மான், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காக, தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

வங்கதேச கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சபீர் ரஹ்மான், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காக, தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், சபீர் விளையாடிக் கொண்டிருக்கையில், இடைவெளியின் போது, சபீரை நோக்கி ரசிகர் ஒருவர் கூச்சலிட்டு இருக்கிறார். இதனால், பொறுமை இழந்த சபீர் ரஹ்மான், கள நடுவர்களிடம் அனுமதி பெற்று, திரைக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த ரசிகரை தாக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனை, மூன்றாவது அம்பயர்கள் பார்த்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை விசாரித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், சபீர் ரஹ்மானின் தேசிய அணி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல், 20 லட்சம் அபராதம் விதித்த வங்கதேச வாரியம், உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆறு மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடந்த சம்பவத்திற்கு சபீர் ரஹ்மான் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளாத வாரியம், அவருக்கு தண்டனையை உறுதி செய்தது. முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு வங்கதேசம் பிரிமீயர் லீக் நடந்த போது, மைதானத்திற்கு வெளியே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அவரது பிபிஎல் லீக் ஒப்பந்த தொகையில் இருந்து 30 சதவிகிதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சபீர் ரஹ்மான் இன்னொருமுறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அவர் நிரந்தரமாக கிரிக்கெட் விளையாட தடை செய்யப்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

×Close
×Close