உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவால் தோல்வி!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிரிஸ்டி கில்மோர் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், 21-19 18-21 21-15 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹராவிடம் சாய்னா மோதினார். இதில், முதல் செட்டை 21 – 12 என்ற கணக்கில் சாய்னா அபாரமாக வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்டிலும் விஸ்வரூபம் எடுத்த நசோமி, 17 – 21, 10 – 21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

இதனால், சாய்னா வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் சென் யூஃபையும் மோதுகின்றனர்.

×Close
×Close