371 ரன்கள் குவித்து இங்கிலாந்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து!

இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி வெற்றி

ஆசைத் தம்பி

ஆச்சர்யமிக்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்று ஸ்காட்லாந்தில் நேற்று அரங்கேறி இருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, அங்கு ஒரேயொரு போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நாளை மறுதினம் (13.06.2018) தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து இதில் விளையாடியது.

3000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 103 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேலம், 94 பந்தில் 140 ரன்கள் குவித்தார். 3 சிக்சர்களையும் 16 பவுண்டரிகளையும் அவர் பறக்கவிட்டார். கைலே கோட்சர் 58 ரன்கள், ஜார்ஜ் முன்சே 55 சேர்க்க, ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் இதுவேயாகும்.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய மார்க் வுட் 10 ஓவரில் 71 ரன்னும், மற்றொரு சிஎஸ்கே வீரர் டேவிட் வில்லே 10 ஓவரில் 72 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். மார்க் வுட் 1 விக்கெட் கைப்பற்றினார். அடில் ரஷித், பிளங்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 372 ரன்கள் எனும் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்தும் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தனர். ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார்.

பேர்ஸ்டோ 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசி அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பிளங்கட் 47 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தும், மற்ற பின்வரிசை வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தி சரித்திரம் படைத்தது.

அதேசமயம், இந்த தோல்வியால் நாளை மறுதினம் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இங்கிலாந்து நிர்வாகம் கூறியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் லண்டனில் தொடங்குகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close