Shardul thakur Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இருக்கிறார். இந்திய ஒருநாள் அணியில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகமான இவர், தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடத்த டெஸ்ட் தொடரிலும், இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் இவரின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்பமிக்க வெற்றி பெற்ற நிலையில், அணியில் ஒரு ஆல்-ரவுண்டர் வீரராக கலக்கி இருந்தார் ஷர்துல். தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் அரங்கேறிய டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தார். இதன் மூலம் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தையும் அவர் தக்கவைத்துக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா மண்ணில் அரங்கேறி வரும் டெஸ்ட் தொடரிலும் ஷர்துல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக, இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துகளை வீசி, ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனை படைத்தார். மேலும், தனது முதல் 5 விக்கெட் சாதனையையும் இந்த போட்டியில் நிகழ்த்தி இருந்தார்.

முன்னதாக, 2018ம் ஆண்டில் இதே மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷர்துல் தாக்கூர், மிகச் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தொடர்ந்து நடந்த டி20 தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசியதால், அவர் அடுத்து நடைபெற்ற முத்தரப்புத் தொடரிலும் இடம்பிடித்தார்.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகு தாயகம் திரும்பிய ஷர்துல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவத்தை அவர் சமீபத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ் உடனான பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

அந்த பேட்டியில் ஷர்துல், “ரயிலில் இருந்தவர்கள் என்னைப் பார்ப்பதையும், நான் உண்மையில் ‘ஷர்துல் தாக்கூர். தானா என்று ஆச்சரியப்படுவதையும் என்னால் உணர முடிந்தது. ஒரு சில கல்லூரிக் மாணவர்கள் என்னை கூகுளில் பார்த்துவிட்டு, என்னுடன் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டனர்.

பிறகு பலரும் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பயணம் செய்தது வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கல்லூரிக் காலத்தில் இருந்து பலமுறை இந்த ரயிலில் தான் பயணம் செய்துள்ளேன். சில வயதானவர்கள் பல ஆண்டுகளாக ரயிலில் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்தனர்.” என்று கூறினார்.
ஷர்துல் தாக்கூர், இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளையும், 6 டெஸ்ட்களில் 24 விக்கெட்டுகளையும், 24 டி20களில் 31 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“