உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று(ஜூன்.16) மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், இந்திய அணி DLS விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பை தொடரில், ஏழாவது சந்திப்பிலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் வீழ்ந்தது.
இந்நிலையில், போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது இந்தச் செயலை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கலாய்த்து வரும் நிலையில், சர்ப்ராஸை 'மூளையில்லாத கேப்டன்' என்று முன்னாள் பாக்., முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி என்ன தவறு செய்ததோ, அதே தவறை பாகிஸ்தான் இப்போது ரிப்பீட் செய்துள்ளது. சர்ப்ராஸ் எவ்வளவு மூளை இல்லாதவர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்மால் சிறப்பாக சேஸிங் செய்ய முடியாது என்பதை எப்படி அவர் மறந்தார்? பாகிஸ்தானின் வலிமையே பவுலிங் தான். டாஸ் வென்ற போதே,பாகிஸ்தான் பாதி போட்டியை வென்றுவிட்டது. ஆனால், அவர் போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்கே முயன்றிருக்கிறார்.
முதலில் பேட்டிங் தேர்வு செய்து, பாகிஸ்தான் 260 ரன்கள் அடித்திருந்தாலே, அதைக் கொண்டு எதிரணியை தோற்கடித்திருக்க முடியும். ஆகையால் தான் சொல்கிறேன், மூளையில்லாத ஒரு கேப்டன்சி என்று. அவரை இம்ரான் கான் நிழலாக நான் பார்க்க விரும்பினேன். ஆனால், இப்போது எல்லாம் காலம் கடந்து போய்விட்டது.
பவுலிங்கில் ஹசன் அலி, வாகா பார்டரில் இருந்து குதித்துவிடலாம். 6-7 விக்கெட்டுகள் கைப்பற்றுவார்கள் என்று பார்த்தால், 82-84 ரன்களை விட்டுக் கொடுக்கவா இங்கு வந்திருக்கிறீர்கள்? என்ன மனநிலை இது?" என்று காரசாரமாக விமர்சித்துள்ளார்.