Advertisment

'என் தளபதிடா'.... ஆசிஷ் நெஹ்ரா குறித்து யுவராஜ் சிங் உருக்கமான கட்டுரை!

நெஹ்ராவின் நண்பரும் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காமல் போராடி வருபவருமான யுவராஜ் சிங், நெஹ்ரா குறித்து உருக்கமான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெஹ்ரா குறித்து யுவராஜ் சிங்

நெஹ்ரா குறித்து யுவராஜ் சிங்

டெல்லியில் நேற்று நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார் ஆசிஷ் நெஹ்ரா. இதையடுத்து, நெஹ்ராவின் நண்பரும் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காமல் போராடி வருபவருமான யுவராஜ் சிங், நெஹ்ரா குறித்து உருக்கமான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "ஆஷுவைப் பற்றி முதலில் நான் சொல்ல வேண்டுமானால். அவர் மிகவும் நேர்மையானவர். ஏதாவது  ஒரு புனித புத்தகம் மட்டுமே அவரை விட நேர்மையானதாக இருக்க முடியும். உண்மையான குணத்திற்காக தனது வாழ்நாளில் அவர் பலரால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்காக தனது குணத்தை மாற்றிக் கொண்டதில்லை.

எனது 'அண்டர் 19' நாட்களில் ஒருநாள் முதன்முறையாக அவரை சந்தித்தேன். அப்போது அவர் இந்திய அணிக்கு விளையாட தேர்வாகியிருந்தார். ஹர்பஜன் சிங்கோடு ஒரே அறையில் அவர் தங்கியிருந்தார். அப்போது, நான் ஹர்பஜனை பார்க்க அவரது அறைக்கு செல்லும் போது, ஒல்லியான தேகம் ஒன்று, ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கும். சூடான தகர கூரையின் மேல் இருக்கும் பூனை போன்றவர் அவர். ஒரு நிமிடம் கூட பொறுமையாக ஓர் இடத்தில் உட்கார மாட்டார். அப்படி உட்கார்ந்து இருக்கும் போது கூட, தனது கண்களை உருட்டிக் கொண்டு இருப்பார்.

அதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். அவரது பேண்ட்டில் யாராவது எறும்புகளை போட்டிருக்கக்கூடும் என நான் நினைத்துக் கொள்வேன். அதன்பிறகு, அவருடன் இணைந்து நான் இந்திய அணிக்காக விளையாடிய போதுதான், நெஹ்ரா இப்படித்தான் என்பதை புரிந்து கொண்டேன்.

சவுரவ் கங்குலி, நெஹ்ராவை 'பொபட்' என்று தான் அழைப்பார். எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருப்பதால் இந்தப் பெயர். தண்ணீருக்கு அடியில் இருந்தால் கூட அவர் பேசிக் கொண்டே இருப்பார். என்னை பொறுத்தவரை, அவர் பேசவே தேவையில்லை, அவரது உடல் மொழியை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும்.

அவரிடம் இருந்து நான் அதிகம் உத்வேகம் பெற்றுள்ளேன். இதை நான் அவரிடம் கூட சொன்னதில்லை. பல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு, வலியுடன் இந்த மனிதனால் 38 வயதிலும் வேகமாக பந்து வீச முடிகிறது என்றால், 36 வயதில் என்னால் ஏன் பேட்டிங் செய்ய முடியாது? உண்மையில், இந்த சிந்தனை தான் இன்று கூட என் மனதில் ஓடியது.

முழங்கை, இடுப்பு, கணுக்கால், விரல், இரண்டு முழங்கால்கள் என மொத்தம் அவர் 11 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். ஆனால், இப்போதும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது என்றால், அவரது கடின உழைப்பும், கொழுந்துவிட்டு எரியும் ஆசையுமே காரணம்.

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது அவரது கணுக்காலில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்தது. அடுத்த போட்டியில் நிச்சயம் அவர் விளையாட முடியாத சூழல். ஆனால் அவரோ 'நான் கண்டிப்பாக விளையாடியே தீருவேன்' என்று மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப் பெற வைத்தார்.

2011-ல் நடந்த உலகக் கோப்பை தொடரின் போது, பாகிஸ்தானிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய ஆஷு, எதிர்பாராதவிதமாக காயம் அடைந்ததால், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.

ஆனால், மும்பையில் நடந்த இறுதிப் போட்டியின் போது, வீரர்களுக்கு குடிநீர், டவல், அட்வைஸ் என அணிக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி செய்தார். ஒரு மூத்த வீரராக இருந்தும் கூட, இது போன்ற வேலைகளை செய்ய உண்மையில் நல்ல மனம் வேண்டும்.

அவருக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. ஆருஷ், ஆரைனா என இரண்டு அற்புதமான பிள்ளைகள் உள்ளனர். ஆருஷின் பந்துவீச்சு அவனது தந்தையை விட நன்றாக உள்ளது (நன்றிக் கடவுளே!)

இது எனக்கு மிகவும் உணர்ச்சிமயமான தருணம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் அப்படித் தான் நிச்சயம் இருக்கும். நான் எப்போதும் கொண்டாட, கிரிக்கெட் எனக்கு ஒரு உண்மையான நண்பனை வழங்கியுள்ளது".

இவ்வாறு யுவராஜ் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தன் தாய்க்கு இரண்டு சத்தியம் செய்து கொடுத்த ஆசிஷ் திவான்சிங் நெஹ்ரா! - படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment