இனிமே தான் தரமான சம்பவத்தை பார்க்கப் போறீங்க! - ஒரே பதிலில் சகலத்தையும் புரிய வைத்த 'பிசிசிஐ தாதா'

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், 2017ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்த கும்ப்ளேவிற்கும் ஏற்பட்ட மோதல் உலகிற்கே தெரியும். ‘குழந்தைகளுக்கு கட்டளையிடுவது போல் நடந்து கொள்கிறார்’ என கோலியும், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என கும்ப்ளேவும் வார்த்தைப் போரில் ஈடுபட விழிபிதுங்கி நின்றது பிசிசிஐ.

‘இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ போராடினோம், ஆனால் எங்களால் அதில் வெற்றிப் பெற முடியவில்லை’ என்று ஏதோ கணவன் மனைவியை சேர்த்து வைக்க போராடியதைப் போல் பிசிசிஐ பட்டும் படாமலும் பதில் சொன்னது. 2017ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் மரண அடி வாங்கிய பிறகு, கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனம். 2016-ல் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டையே நீக்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது.

இந்த விவகாரம் குறித்து அப்போது காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும்.  கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதற்கும் பிசிசிஐ ‘N காது K காது’ என்ற மோடில் தான் இருந்தது.

அதன்பிறகு, கேப்டன் கோலியின் செல்ல கோச் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இப்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தனிக் கதை.

ஆனால், இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்பாகவே அதாவது, 2016ம் ஆண்டு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே, ரவி சாஸ்திரிக்கும், சவுரவ் கங்குலிக்கும் உரசல் இருந்தது.

அதாவது, இந்திய அணியின் பயிற்சியாளராக அல்லாமல், அணியின் இயக்குனராக 2014 முதல் 2015ம் ஆண்டு உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். அப்போது ஏற்பட்ட நெருக்கம் தான் கோலிக்கும், சாஸ்திரிக்கும் இந்தளவிற்கான பிணைப்புக்கு காரணம்.

2016ல் இந்தியாவின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் வந்த போது, இந்திய அணியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்த சச்சின், கங்குலி, லக்ஷ்மன் தான் இறுதி வேட்பாளரின் பெயரை பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ய நேரிட்டது. அதில், அனில் கும்ப்ளே தான் பயிற்சியாளர் என்பதில் சச்சின், லக்ஷ்மனை விட கங்குலி மிக உறுதியாக இருந்தார். ஏனெனில், கங்குலி – கும்ப்ளே நட்பு அத்தகையது. நட்பைத் தாண்டி கும்ப்ளேவின் ‘ஸ்ட்ரிக்ட் அப்ரோச்’ பற்றி நன்கு அறிந்தவர் கங்குலி. கோலி தலைமையிலான இளம் இந்திய அணிக்கு, அப்படிப்பட்ட அப்ரோச் தேவை என்று கங்குலி நம்பினார்.

சச்சினுக்கும், லக்ஷ்மனுக்கும் கூட இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாததால், ஏகமனதாக கும்ப்ளே தேர்வானார். ஆனால், இதை சற்றும் எதிர்பார்க்காத சாஸ்திரி பெரும் அதிருப்தியில் இருந்தார். இதனை சில தருணங்களில் அவர் வெளிப்படுத்தவும் செய்தார்.

இதுகுறித்து கங்குலியிடம் அப்போது நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, “அவரை தேர்ந்தெடுக்காமல், அனில் கும்ப்ளேவை தேர்ந்தெடுத்ததற்கு நான் தான் காரணம் என சாஸ்திரி நினைத்தால், அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார் என்று அர்த்தம்” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுத்தார்.

 

இருவருக்கும் இடையில் ஃபேஸ் டூ ஃபேஸ் கருத்துகள் காரமாகவே பரிமாறிய நிலையில், காலம் மாறி, இப்போது அதே பிசிசிஐ-யின் தலைவராகவே கங்குலி தேர்ந்தெடுக்கப்பட, அனைவரது கவனமும், கோச் ரவிசாஸ்திரியுடனான கங்குலியின் ‘டீல்’ எப்படி இருக்கப் போகிறது என்பதில் இருக்கிறது.

இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளார்கள் சந்திப்பில் பிசிசிஐயின் புதிய தலைவராக விரைவில் பதவியேற்க உள்ள கங்குலியிடம், “ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட, அதற்கு சிரித்துக் கொண்டே “ஏன்? இப்போது அவர் என்ன செய்துள்ளார்?” என்று பதில் அளித்திருக்கிறார் தாதா!!

இருக்கு… இனிமே தான் தரமான சம்பவங்கள் பார்க்கப் போறீங்க!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close