Advertisment

ஐபிஎல் 2018: தோனி ஆரம்பித்து வைத்த டாஸ் மர்மம்! காரணம் என்ன?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐபிஎல் 2018: தோனி ஆரம்பித்து வைத்த டாஸ் மர்மம்! காரணம் என்ன?

அன்பரசன் ஞானமணி

Advertisment

ஐபிஎல் 2018 தொடரில் நேற்றுவரை (ஏப்.13) 8 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. நம்புங்கள்... இந்த எட்டு ஆட்டத்திலும் டாஸ் வென்ற கேப்டன் பவுலிங்கையே தேர்வு செய்துள்ளனர். இதில் 7 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியே வெற்றியும் பெற்றுள்ளது.

என்னடா இது! எப்படி சேஸிங் பண்ற டீம் மட்டும் ஜெயிக்குது?-ன்னு விட்டத்த பார்த்து யோசிச்சா, பதிலே கிடைக்கல.. சரி, ஐபிஎல் ஆரம்பிச்சு ஒருவாரம் ஆகிடுச்சு. அப்டியே எல்லா மேட்சையும் குட்டியா ரீ-கால் பண்ணி, ஏன் இப்படியொரு 'மாய மந்திரம்' நடக்குதுன்னு கண்டுபிடுப்போம்-னு, வேட்டிய மடிச்சுக் கட்டி கிளம்பிய கதையை கொஞ்சம் பார்ப்போம்.

மேட்ச் 1

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

அடடா! மறக்க முடியுமா இந்த மேட்ச..!? பிராவோ என்னா அடி! மும்பை கோட்டையில, வான்கடே ஸ்டேடியத்துல டோட்டல் அம்பானி குடும்பத்தையே அலற விட்டுடாப்ல! இந்த மேட்சில் 'தல' தோனி டாஸ் வின் பண்ணவுடன் பீல்டிங் செய்கிறோம்-னு சொன்னார். அப்போ அவர் சொன்ன காரணம், 'இன்னும் கொஞ்சம் நேரத்துல பனி விழ வாய்ப்புகள் இருக்கு. அதனால, முதல்ல நாங்க பீல்டிங் பண்றோம்'-னார்.

இருந்தாலும், மும்பை பசங்க நல்லாவே பவுலிங் செஞ்சு, சிஎஸ்கே-வ ஏறக்குறைய காலி செஞ்சப்புறம், இதோ நான் உங்கள செய்யுறன்டா'-னு பிராவோ ருத்ரதாண்டவம் ஆடினதுனால தோனி படை அந்தப் போட்டியில் வென்றது.

மேட்ச் 2

கிங்ஸ் XI பஞ்சாப் vs டெல்லி டேர் டெவில்ஸ்

நம்ம சென்னைப் பையன் ரவிச்சந்திரன் அஷ்வின் முதன் முதலா ஐபிஎல்-ல கேப்டன் ஆன பின், களம்கண்ட முதல் மேட்ச். மதியம் 3.30 மணிக்கு கொளுத்துற வெயில்ல, மொஹாலி-ல நடந்த இந்த மேட்சுல டாஸ் வின் பண்ண அஷ்வின், பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனா, ஏன் பீல்டிங் தேர்வு செஞ்சோம்-ங்கற காரணத்த அவர் சொல்லல.. சரி, பிட்ச் ரிப்போர்ட் என்னனு நாம ஆராய்ஞ்சா, இரவு பனி ஏற்பட வாய்ப்பு இருக்கு-னு சொல்லப்பட்டிருக்கு. அதனால தான் நம்மாளு பவுலிங்க சூஸ் பண்ணி இருக்காப்ல.. இறுதில, டெல்லியை கேஷுவலா ஊதித் தள்ளியது பஞ்சாப்.

மேட்ச் 3

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

விராட் கோலி vs தினேஷ் கார்த்திக்.... நிடாஹஸ் டிராபி டி20 தொடர்ல, பாம்புகள நசுக்கிட்டு வந்த கார்த்திக்கிற்காவே, அன்னைக்கு கொல்கத்தா டீமுக்கு சப்போர்ட் செஞ்சாங்க நம்ம பசங்க... இதுல, டாஸ் வின் பண்ணுன கார்த்திக், பீல்டிங் தேர்வு செய்தார். இத்தனைக்கும், பிட்ச் பேட்டிங்கிற்கு செமயா ஒத்துழைப்பு தரும் பிட்ச் ரிப்போர்ட் சொல்லியிருக்கு. இரு கேப்டன்களும் அதையே முன் மொழிஞ்சாங்க. ஆனாலும், தினேஷ் பீல்டிங்கை தான் தேர்வு செய்தார். பெங்களூரு 176 ரன் அடிச்சும், சேஸிங் செய்து வென்றது கொல்கத்தா.

மேட்ச் 4

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

ஹைதராபாத்தில் நடந்த இந்த மேட்சுல, பனியும் இல்ல ஒன்னும் இல்ல... வெயில் கிழிச்சு எடுத்தது. இரவில் கூட அனல் தகதகத்தது. ஆனாலும், டாஸ் வின் பண்ண ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், பவுலிங்கையே செலக்ட் செய்தார். ஏன்னு- அவருக்கு தான் வெளிச்சம். ஆனா பாருங்க, ஹைதராபாத் தான் இதில் வென்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 125 ரன்னுக்கு சுருண்டுவிட்டது.

மேட்ச் 5

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானம் காலத்திற்கும் மறக்க முடியாது மேட்ச் இது. இதை பத்தி அதிகம் சொல்லத் தேவையில்லன்னு நினைக்கிறேன். ஏன்னு உங்களுக்கே தெரியும். நேரா விஷயத்துக்கு வந்துடுவோம்... இருந்தாலும், மனசு கேக்காம ஒரு குட்டி கவிதை மட்டும் சொல்லிடறேன்,

ஆண்மைக்கு பஞ்சம் இங்கில்ல,

மேலாண்மை வாரியம் வரவில்ல,

சாவிற்கு அஞ்சும் மனமில்ல - இங்கு

காவிரி இல்லா வளமில்ல!.

இப்போ விஷயத்துக்கு வருவோம்.... டாஸ் வென்ற தோனி, வழக்கம் போல பீல்டிங்கை தேர்வு செய்கிறார். ஆனால், இம்முறை அவர் சொன்ன காரணம் புதிது.

'டாஸ் வென்றால், நாங்கள் எப்போதும் சேஸ் செய்யவே விரும்புகிறோம்' என்றார். இது என்னடா புது புரளி-யா இருக்கு?-ன்னு நாம யோசிக்க, கொல்கத்தாவை வென்றது சென்னை.

மேட்ச் 6

ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ்

ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில், பனி வரும் அறிகுறி நன்றாக தெரிந்ததால், டெல்லி கேப்டன் கம்பீர் தயக்கமின்றி பீல்டிங் சூஸ் பண்ணினார். ஆனால், அவரு கெட்ட நேரமோ என்னமோ பாருங்க, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 17.5 ஓவரில் 153-5 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்துடுச்சு!. ஒருவழியா அது நின்னு மேட்ச் ஆரம்பிக்கும் போது மணி நள்ளிரவு 11.55. இதனால், டெல்லி 7 ஓவரில் 71 ரன் அடிச்சா வெற்றின்னு நிர்ணயிக்க, 60 ரன் மட்டும் அடிச்சு 10 ரன் வித்தியாசத்துல தோற்றது டெல்லி.

இதுவரை நடந்த மேட்சுல, டாஸ் வின் பண்ண டீம் தோத்தது-னா அது டெல்லி மட்டும் தான்.

மேட்ச் 7

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்

ஹைதராபாத் வெய்யில பத்தி நான் மறுபடியும் சொல்ல விரும்பல.... ஆனா, அன்னைக்கு மரண வெயில். ஆனாலும், 'பவுலிங் தான் தேர்வு செய்வேன்'னு உறுதியா இருந்த கேப்டன் வில்லியம்சன், மும்பையை பேட் செய்ய அழைத்தார். மும்பை 147 ரன் அடிக்க, லாஸ்ட் ஓவர் லாஸ்ட் பந்தில் திரில் வெற்றிப் பெற்றது ஹைதராபாத்.

மேட்ச் 8

பெங்களூரு vs பஞ்சாப்

சின்னசாமி ஸ்டேடியத்துல, சொந்த மக்கள் முன்னாடி களமிறங்கிய கோலி, பீல்டிங்கை சூஸ் செய்தார். அப்போது ஒரு வார்த்தை சொன்னார் பாருங்க... 'டாஸின் முடிவை வைத்து தான் மேட்ச்சின் முடிவு அமைகிறது என மக்கள் நினைப்பதாக நான் நினைக்கிறேன்' என்று சொல்லி கியூட் ஸ்மைலை தட்டி விட்டார். அதனால், நாங்கள் சேஸிங்கே செய்கிறோம் என்றார்.  பஞ்சாப் 155 ரன் அடிக்க, கடைசி ஓவரில் வென்றது விராட் படை.

ஆக மொத்தம் எட்டு மேட்ச்சுல 7 மேட்ச், சேஸிங் செய்த அணிக்கே வெற்றி. ஒரு போட்டி அதுவும் மழையால் சுத்தமாக அடிக்க முடியாமல், டெல்லி சேசிங்கில் தோற்றது.

ஃபர்ஸ்ட் மேட்ச்சுல தோனி ஆரம்பிச்சு வச்ச இந்த சரித்திரத்துக்கு பின்னாடி என்ன வரலாறு-னு பார்த்தா, ஒன்னு பனி காரணமா இருக்குது... இன்னொன்னு, பவுலர்ஸ் மீது நம்பிக்கையில்லாமல் அணிகள் உள்ளது என்பதையே இந்த டாஸ் முடிவுகள் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன.

சனி, ஞாயிறை தவிர்த்து வேலை நாட்களில் நடைபெறும் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தான் தொடங்குகிறது. இதனால், இரவில் பனியின் தாக்கம் காரணமாக சில கேப்டன்கள் பவுலிங்கை சூஸ் செய்துள்ளனர். சிலர், 'எதுக்குன்னு தெரில... ஆனா ஃபர்ஸ்ட் பவுலிங் தான்' என்று முடிவு எடுக்கின்றனர். இதுபோன்ற அணிகள் தான் தங்கள் பவுலர்களை நம்பாமல் இருக்கின்றன. இதற்கு கேப்டன்களை குறை சொல்ல முடியாது.

டி20 என்றால், பேட்ஸ்மேன்களின் களம் என்று சில ஓனர்கள் நினைக்கும் அணியில் தான் இந்தப் பிரச்சனை உள்ளது. டி20-ல் பேட் மட்டும் அதிகம் பேசினால், அங்கு சுவாரஸ்யமும் இருக்காது... எதிர்பார்ப்பும் இருக்காது. ஐபிஎல்-ல் இது தொடருமெனில், அது ஊனமாகவே பார்க்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!.

'Best vs Best' என்பது 'Bat vs Ball' என்று அர்த்தம் கொடுத்தால் அங்கு தான் உண்மையான கிரிக்கெட் வாழும்!.

Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment