Advertisment

இலங்கை கிரிக்கெட் புதிய ஸ்டார் : அகிலா தனஞ்செயாவுக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சூப்பர் ஸ்டாரான அகிலா தனஞ்செயாவுக்கும், சென்னைக்கும் இடையிலான தொடர்பு எத்தனை பேருக்கு தெரியும்?

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
srilankan cricketer, akila dananjaya

இலங்கை கிரிக்கெட் புதிய சூப்பர் ஸ்டாரான அகிலா தனஞ்செயாவுக்கும், சென்னைக்கும் இடையிலான தொடர்பு எத்தனை பேருக்கு தெரியும்?

Advertisment

ஆகஸ்ட் 24-ம் தேதி இலங்கையின் பல்லேகெல்லே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜெயித்தது இந்தியா. ஆனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றவர், இலங்கை அணியின் 23 வயதான இளம் வீரர் அகிலா தனஞ்செயா.

srilankan cricketer, akila dananjaya அகிலா தனஞ்செயாவின் பந்துவீச்சில் லோகேஷ் ராகுல் கிளீன் போல்ட்..

முன்னதாக இலங்கை அணியை 236 ரன்களில் சுருட்டி வீசியது இந்தியா.அடுத்து மழை குறுக்கிட்டதால், இந்தியா 47 ஓவர்களில் 231 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் முதல் 15 ஓவர்களில் விளையாடியதைப் பார்த்தபோது, மற்றொரு மெகா வெற்றியை நோக்கி இந்தியா பயணிப்பதாகவே தோன்றியது.

ஆட்டத்தின் 16-வது ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 109 ரன்களாக இருந்தபோது, அகிலா தனஞ்செயாவின் ‘லெக் பிரேக்’ பந்துவீச்சில் ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்யு ஆனார். அப்போதும்கூட அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. கேப்டன் விராட் கோலி ஒரு சோதனை முயற்சியாக தனக்கு பதிலாக லோகேஷ் ராகுலை 2-வது விக்கெட்டுக்கு உள்ளே அனுப்பினார். ஆனால் 18-வது ஓவரில் 5 பந்துகளில் முறையே லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், கேப்டன் கோலி ஆகிய மூவரையும் தனது ‘கூக்ளி’யால் கிளீன் போல்ட் செய்தார்.

srilankan cricketer, akila dananjaya அகிலா தனஞ்செயாவின் 6 விக்கெட் ஆர்ப்பரிப்பு

இதனால் ஆட்டத்தின் போக்கே மாறியது. 109 ரன்கள் வரை விக்கெட் இழக்காத இந்தியா, 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் 6 விக்கெட்டுகளை, தான் வீசிய முதல் 4 ஓவர்களில் கைப்பற்றி அசத்தினார் தனஞ்செயா. அதன்பிறகு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவரான முன்னாள் கேப்டன் டோனியும், கடைசிநிலை பேட்ஸ்மேன் புவனேஸ்வர்குமாரும் போராடி அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால் இந்தத் தொடரில் 2-0 என முன்னிலையில் இருக்கிறது இந்தியா.

உலக கிரிக்கெட் அணிகளில் எப்போதுமே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சிறந்த அணியாக கருதப்படுவது இந்தியாதான். அந்த இந்தியாவின் முன்னணி வீரர்களை தனது மாயாஜாலப் பந்துவீச்சில் மிரளவைத்த அகிலா தனஞ்செயா, ஒரே நாளில் உலக அளவில் பேசப்படும் வீரர் ஆகியிருக்கிறார்.

இலங்கை மேற்கு மாகாண நகர்களில் ஒன்றான பாணாந்துறையை சேர்ந்தவர் தனஞ்செயா. அடிப்படையில் இவர் சென்னை வீரர் அஸ்வினைப் போல, ‘ஆஃப் பிரேக்’ பந்துவீச்சாளர்தான். ஆனால் அஸ்வினைப் போலவே பந்துவீச்சில் வித்தியாசங்களை கையாளுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி! அதாவது, ஆஃப் பிரேக் தவிர, லெக் பிரேக், கூக்ளி, தூஸ்ரா, கேரம் உள்பட தனது பந்துவீச்சில் மொத்தம் 6 வகையான தாக்குதலை வெளிப்படுத்துபவர் இவர்.

இவரது திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வந்தவர், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே! ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சிறந்தவரான ஜெயவர்த்தனே, வலைப் பயிற்சியின்போது இவரை அதிகம் பயன்படுத்தினார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்துக்கு எதிராக 18-வது வயதிலேயே ஒருநாள் மற்றும் டி 20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதுவரை இலங்கையின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலோ, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேசப் போட்டிகளிலோ பங்கேற்று அனுபவம் பெறாத இவருக்கு நேரடியாக சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்ததை பலரும் சர்ச்சை ஆக்கினார்கள். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத தனஞ்செயா, ஆகஸ்ட் 24-ம் தேதி களம் இறங்கியது அவருக்கு 4-வது சர்வதேச ஒருநாள் போட்டி. எனவே அவரை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ளாமல், அலட்சியமாக ஆடி இந்திய ஹீரோக்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்துவிட்டனர். இதை ஆட்டம் முடிந்த பிறகு, கேப்டன் விராட் கோலி வேறு வார்த்தைகளில் ஒப்புக்கொண்டார்.

‘அவரது பந்துவீச்சு பற்றி நாங்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. அதனால் அவரது பந்துகளை கணிக்க முடியாமல் போய்விட்டது. லோகேஷ் ராகுலை முன்கூட்டியே அனுப்பாமல், நான் 3-வது வீரராக இறங்கியிருந்தாலும் தனஞ்செயா வீசிய பந்துக்கு அவுட் ஆகியிருப்பேன். அவரது பந்துவீச்சு அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது’ என பாராட்டினார் கோலி. 27-ம் தேதி நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் தனஞ்செயா பந்துவீச்சை கவனமாக இந்திய வீரர்கள் எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் வீரர் தனஞ்செயாவுக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு தெரியுமா? 2013-ம் ஆண்டு ‘தல’ டோனி தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ ஐ.பி.எல். அணிக்கு தனஞ்செயாவும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்போது இலங்கை வீரர்களை சென்னை அணியில் ஆட வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், இவரை களம் இறக்கவில்லை.

மற்றவர்கள் தெரிந்திருக்காவிட்டாலும், டோனி மட்டும் தனஞ்செயாவின் பலம், பலவீனங்களை அப்போதே அறிந்திருப்பார். ஆகஸ்ட் 24-ம் தேதி முன்னணி வீரர்கள் சுருண்டுவிட்ட நிலையில் புவனேஷ்வர்குமாரை துணைக்கு வைத்துக்கொண்டு கடைசி வரை டோனியால் போராடி ஜெயிக்க முடிந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment