புள்ளிவிவரம் என்ன சொல்லுதுன்னா..... ஹைதராபாத் - கொல்கத்தா எப்படி?

ஒட்டுமொத்தமாக, நேற்று நடந்த மும்பை - புனே போட்டியை ஒப்பிடும் போது, இதுதான் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும்

இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ‘எலிமினேட்டர்’ பிரிவு போட்டியில், கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வார்னரின் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

50 – 50….

லீக் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து சமபலத்துடன் உள்ளன. கொல்கத்தாவில் நடந்த போட்டியில், 173 ரன்கள் சேஸிங்கை துரத்திய ஹைதராபாத், 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

ஹைதராபாத்தில் நடந்த மற்றொரு போட்டியில், வார்னர் கொல்கத்தா பவுலிங்கை துவம்சம் செய்து சதமடிக்க, 210 எனும் கடினமான சேஸிங்கில், 161/7 என்று திருப்திப்பட்டுக் கொண்டது கொல்கத்தா.

கொல்கத்தாவை பொறுத்தவரை ஓப்பனிங் என்பது அந்த அணியின் மிகப்பெரிய பலம். கிறிஸ் லின், சுனில் நரைன் என்ற, நாம் கற்பனை செய்து கூட பார்க்காத அதிரடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், முதல் 8 ஓவர்கள் வரை நின்றுவிட்டாலே போதும், எதிரணியின் நிலைமை மோசம் தான். மற்றபடி, கேப்டன் கம்பீர், உத்தப்பா, மனீஷ் பாண்டே, யூசுஃப் பதான் என மேட்ச் வின்னர்கள் இருப்பதும் சாதகமான விஷயமே. குறை சொல்ல முடியாத பவுலிங், கவலையில்லாத பேட்டிங் என பலமாகவே நிற்கிறது கொல்கத்தா.

ஹைதராபாத்தை பொறுத்தவரை ‘எல்லாமே எங்கள் அண்ணன் தான்’ என்கிற ரேஞ்சில் சன்ரைசர்ஸ் பாய்ஸ், வார்னரை பார்த்து பாட்டே பாடலாம். பேட்டிங்கில் அவர் களத்தில் இருக்கும் வரை ரன் ரேட் குறையாது. தவான் ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஆறுதல் விஷயம். ஆனால், யுவராஜ், நெஹ்ரா காயம் அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். புவனேஷ் குமார், ரஷீத் கான், விஜய் ஷங்கர் என பவுலிங்கில் கொல்கத்தாவிற்கு சற்றும் குறைவில்லாத அணி தான்.

இரு அணிகளுமே, இறுதிப் போட்டியை சந்தித்த அனுபவம் கொண்டுள்ளவை என்பதால், இதுபோன்ற நெருக்கடிகளை சமாளிக்கவும், அதை சாதகமாக மாற்றவும் நன்கு தெரிந்து வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டுமொத்தமாக, நேற்று நடந்த மும்பை – புனே போட்டியை ஒப்பிடும் போது, இதுதான் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும். இந்த இரு அணிகளும் இன்று மோதிக் கொள்ளும் விதத்தை பார்த்த பிறகு நம் மனதில் தோன்றப் போவது இதுதான்… ‘மேட்ச்சுனா இது மேட்ச்…ரியல் ஃபைட்-ல…நேத்து நடந்ததெல்லாம் ஜுஜுபி மேட்ச்.. தோனியோட 5 சிக்ஸை தவிர”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close