டி20-யிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டிய இந்தியா : வெற்றி ரகசியம் என்ன தெரியுமா?

டி-20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டியது இந்தியா. முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்ற ரகசியத்தை ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார் வெளியிட்டார்.

டி-20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டியது இந்தியா. முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்ற ரகசியத்தை ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார் வெளியிட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டித் தொடரை 5-1 என வாகை சூடி வரலாறு படைத்தது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நேற்று (18-ம் தேதி) ஜோகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் ஜே.பி.டுமினி டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்த சுரேஷ் ரெய்னா, 7 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடியது. இதனால் இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 78 ரன்கள் குவித்தது. டி-20 வரலாற்றில் பவர் பிளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இது!

விராட் கோலி 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அப்போது இந்தியா 9.3 ஓவரில் 108 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 12-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார். தவான் 39 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் மணீஷ் பாண்டே-டோனி ஜோடியால் எதிர்பார்த்த அளவு அதிரடியாக விளையாட முடியவில்லை. டோனி 11 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் தோழரான கிரிஸ் மோரிஸ் பந்தில் போல்டு ஆனார்.

இறுதியில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் ஸ்மட்ஸ் , ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணியில் ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்கு பிடித்து சிறப்பாக ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பெஹார்டியன் 27 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் மட்டும் அவர் 3 விக்கெட்டுகளை சரித்தது குறிப்பிடத்தக்கது. அதே ஓவரின் ரன் அவுட் முறையிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது.

உனத்கட், பாண்ட்யா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச டி-20 போட்டில் 5 விக்கெட் வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை. இந்த வெற்றி குறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில், ‘சரியான இடத்தில் பந்து வீசுவதில் கவனம் செலுத்தினேன். சிரமமான சூழல்களில் சிறப்பாக செயல்படுவது எப்போதுமே சந்தோஷம் தரக்கூடியது. பந்தின் வேகத்தை கூட்டிக் குறைத்து வீசியது பலன் அளித்தது. எங்கள் திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது’ என்றார்.

புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டதுபோல, பந்து வீச்சின் வேகத்தை அவ்வப்போது இந்திய பவுலர்கள் மாற்றியதால்தான் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. இல்லாவிட்டால், பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 2014 ரன்களை தென் ஆப்பிரிக்க வீரர்கள் ‘சேஸ்’ செய்திருக்க முடியும்.

பெருவிரல் காயத்தால் பாதிக்கப்பட்ட சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், நேற்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் மிடில் ஓவர்களில் இந்திய பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை சரிகட்ட கேப்டன் கோலி ஒரு வியூகம் வகுத்தார்.

வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை முதலில் ஒரு ஓவர் மட்டும் வீச வைத்தார். அதில் 3 ரன்கள் மட்டுமே பும்ரா கொடுத்திருந்தாலும் அவரை கடைசிகட்ட ஓவர்களை வீசுவதற்காக வைத்துக்கொண்டார். கோலியின் அந்த கேப்டன்ஷிப்பிற்கு பலன் கிடைத்தது. கோலியும் காயம் காரணமாக ஆட்டத்தின் பிற்பகுதியில் களத்தில் இல்லை. அப்போது ‘மிஸ்டர் கூல்’ டோனி, கேப்டன் பணியை செய்தார். ஆனாலும் தனது காயம் பயப்படும்படி இல்லை என பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் கோலி குறிப்பிட்டார்.

இருஅணிகளுக்கு இடையேயான அடுத்த டி-20 போட்டி செஞ்சூரியனில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close