ஹர்திக் பாண்ட்யாவின் முன்னோர்கள் தமிழக பூர்வீகத்தைச் சேர்ந்தவர்களா?

ஹர்திக் பாண்ட்யாவின் மூதாதையர்கள் பண்டைய தமிழகத்தில் இருந்த பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோவாக, ஸ்டாராக ஜொலித்து வருபவர் ஹர்திக் பாண்ட்யா. வெறும் 23 வயதே நிரம்பிய இந்த இளைஞன் அடிக்கும் சிக்ஸர்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது. அதிலும், ஒரு சிக்ஸ், ரெண்டு சிக்ஸ் இல்லை… அடித்தால் ஹாட்ரிக் சிக்ஸர் தான் வேண்டுமாம். அந்த அளவிற்கு இவரை நேசிக்கத் தொடங்கிவிட்டனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

1993-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் தான் ஹர்திக் பாண்ட்யா பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹிமன்ஷு பாண்ட்யா. வட இந்தியராக இருந்தாலும், இவரது குடும்பத்தின் பட்டப் பெயர் ‘பாண்ட்யா’ என்று உள்ளது. கேட்பதற்கு தமிழ்ச் சொல்லான ‘பாண்டியா’ போலவே இது இருப்பது சற்று வியப்பே!.

இதுகுறித்து நாம் ஆராய்ந்த போது, ஆச்சர்யம் அளிக்கக்கூடிய சில தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சந்தானம் சுவாமிநாதன் நம்மிடம் இதுகுறித்து கூறுகையில், “முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட் என அடைமொழி வந்தது தெரியுமா? ஏனெனில், இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி தான் அழைப்பார்கள்.

இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பார்கள். இதுகுறித்த உறுதியான ஆதாரம் இல்லையென்றாலும், பாண்ட்யா என்று அழைக்கப்படுவதற்கு இதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது” என்றார்.

இதனால் தான் குஜராத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் குடும்பத்தின் பட்டப்பெயர் பாண்ட்யா என்று அழைக்கபடுவதாக கூறப்படுகிறது. ஹர்திக்கின் மூதாதையர்கள் பண்டைய தமிழகத்தில் இருந்த பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள், பல வருடங்களுக்கு முன்பாகவே பாண்டிய தேசத்தில் இருந்து குஜராத்திற்கு தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதும் பணிக்காகவோ சென்று பின் அங்கேயே குடிப்பெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில், “இன்றும் லண்டன், அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த பலரும் பாண்ட்யா என்ற அடைமொழியோடு வசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கே பாண்ட்யா என்கிற பெயர் எப்படி வந்தது, எதனால் வந்தது என்பதே தெரியவில்லை. குஜராத்தில் வசிக்கும் பிராமணர்களுக்கும், தென்னிந்தியாவைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் இடையேயான பல ஒற்றுமைகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

×Close
×Close