முக்கிய முடிவு எடுத்தோம்; அஷ்வினுக்கு இனிமேல் இடமில்லை! – சொல்லாமல் சொன்ன ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு, இந்த முடிவை நானும் கேப்டன் கோலியும் எடுத்தோம்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பின்னராக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின். விரல்களால் மாயாஜாலம் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கலை தேர்ந்தவர் இந்த வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர். குறிப்பாக, 2014 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், விரல் வித்தை காட்டி ஆம்லாவை போல்டாக்கியது எல்லாம் வேற லெவல்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி பணியாற்றிய வரையில், எந்தவித தங்குதடையுமின்றி அணியில் நீடித்தார் அஷ்வின். இவர் மட்டுமல்ல, ஜடேஜாவும் தான். இவர்கள் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் அணியில் இடம் பிடித்து வந்தார்கள்.

ஆனால், இப்போது இந்திய தலைமை கோச் ரவி சாஸ்திரி கூறுவதை பார்த்தால்,  2017 ஜூன் ஜூலையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் தான் அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும்  குறுகிய ஓவர் போட்டிகள் கொண்ட கடைசி தொடராக அமைந்துவிடுமோ என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், தற்போது ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு, ரிஸ்ட் ஸ்பின்னர்களை அணிக்கு கொண்டுவருவது என்ற முடிவை நானும் கேப்டன் கோலியும் எடுத்தோம். அப்போட்டிக்குப் பிறகு, எங்களது முதல் பணி இந்த முடிவை எடுத்தது தான். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பது குறித்து நானும் கோலியும் அடிக்கடி பேசுவோம். மிடில் ஓவர்களில் வலிமையாக சென்றுக் கொண்டிருக்கும் பார்ட்னர்ஷிப்களை உடைக்க வேண்டும் என்பதே எங்களது ஐடியா. அதன்பிறகு, இதை யார் சிறப்பாக செய்வார்கள் என வீரர்கள் வேட்டையில் இறங்கினோம்.

அப்போது தான் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு குல்தீப், சாஹல் என்ற இருவரும் கிடைத்தனர். வெரைட்டியாக பந்து வீசி, பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தனர். பேட்டிங், ஃ பீல்டிங் மட்டும் முக்கியமல்ல, இதுபோன்ற கிளாசிக்கான ஸ்பின் பவுலிங்கும் தேவை. தற்போது, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான்” என்றார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரே, ‘குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் அணிக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்’ என்று சொல்லும் போது, இனிமேல் அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் கேப்டனும், தற்போதைய வர்ணனையாளரும் வல்லுநருமான இயன் சாப்பல் 1935-36-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி, ரிஸ்ட் ஸ்பின்னர்களைக் கொண்டு தென் ஆப்பிரிக்காவை மடக்கியதை நினைவு கூர்ந்து, சாஹலையும், குல்தீப்பையும் பாராட்டும் அளவிற்கு அவர்கள் இருவரும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அஷ்வின், ஜடேஜாவின் இறுதி ஒருநாள் மற்றும் டி20 தொடர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரானது என வரலாற்றில் எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Turned to wrist spinners after champions trophy final loss against pakistan says ravi shastri

Next Story
தென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்குகிறேன் – ‘குட்டி தல’ சுரேஷ் ரெய்னா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com