இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி அருகில் வந்து போதிய வெளிச்சமின்மையால் மறைந்து போனது.
நாக்பூரில் வரும் 24ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக போட்டியில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள்.
இதனால், தமிழ்நாடு அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பொறுப்பு வகித்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில், "நான் உண்மையில் ஆச்சர்யமாக உணர்கிறேன். இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இப்போது நனவாகியிருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியின் ஓய்வறையில் நானும் பங்கெடுக்கப் போகிறேன் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய ஏ அணிக்காக விளையாடியது, ஒரு ஆல்-ரவுண்டராக வளர எனக்கு உதவியது. ஒரு வீரனாக நான் நிறைய முதிர்ச்சி அடைந்துள்ளேன். கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடவும் கற்றுள்ளேன்" என்றார்.
ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், புவனேஷ் குமாருக்கு பதிலாகத் தான் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். தவான் வெளியேறி இருப்பதால், ஓய்வறையில் இருக்கும் மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதனால், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியின் விவரம் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், எம்.விஜய், புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திரா ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் விஜய் சங்கர்.