சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

இலக்கை துரத்தி பிடிக்கும் இன்னிங்ஸில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகளில் கொண்ட ஒரு நாள் நாட்கள் தொடரில் அந்நாட்டு அணியுடன் மோதியது. இந்த தொடரில் ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும் ஒரு போட்டியில் மேற்கிந்திய தீவுகளும் வெற்றி பெற்றன. தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

இந்நிலையில், கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஜமைக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷாய் ஹோப் 51 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே ஷிகார் தவானின் (4) விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 39 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இணை கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது. விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் எடுத்தார். கடைசியில், 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் 3-1 என்ற விகிதத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இறுதி போட்டியில் ஆட்டநாயகனாக சதம் அடித்த விராட் கோஹ்லியும், தொடர் நாயகனாக 4 போட்டிகளிலும் சேர்த்து 336 ரன்கள் எடுத்த ரஹானேவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சாதனைகள்:

**விராட் கோஹ்லி, இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 28-வது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 49 சதம், ரிக்கி பாண்டிங் 30, சங்ககரா மற்றும் ஹாசீம் ஆம்லா ஆகியோர் தலா 25 சதங்கள் எடுத்திருந்த நிலையில், அந்த வரிசையில் விராட் கோஹ்லியும் சேர்ந்துள்ளார்.

**இலக்கை துரத்திப் பிடிக்கும் இன்னிங்ஸில் மட்டும் கோஹ்லி விளாசிய சதம் 18. இதில், கோஹ்லி தான் உலகின் நம்பர் 1 வீரர். சச்சின் (17 சதம்), இலங்கை வீரர் தில்ஷன் (11 சதம்), மேற்கிந்திய தீவுகள் வீரர் கிரிஸ் கெயில் (11 சதம்), பாகிஸ்தான் வீரர் அன்வர் (10 சதம்), இலங்கை வீரர் ஜெயசூர்யா (10 சதம்) ஆகியோர் விராட் கோஹ்லியை விட பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

**மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்த தொடர் மூலம் ரஹானே (336 ரன்கள்) படைத்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக 2002-ஆம் ஆண்டு விவிஎஸ் லக்ஷ்மன் (312 ரன்கள்), 2011-ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா (305 ரன்கள்), 2002-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் (300 ரன்கள்) ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, ஒரே ஒரு டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.

×Close
×Close