அதலபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

இந்த மூன்றும் இன்று ஒருசேர அதிகரித்துக் கொண்டிருப்பதால் தான், ஒரு காலத்தில் 'கத்துக்குட்டி' அணியாக இருந்த வங்கதேசம் இன்று வெற்றிகளை குவிக்கிறது

அன்பரசன் ஞானமணி

குட்டித் தீவான இலங்கை, ஒருகாலத்தில் அர்ஜுனா ரணதுங்கா, ஜெயசூர்யா, மார்வன் அட்டப்பட்டு, ரசல் அர்னால்ட், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் என பல மிகப்பெரிய ஜாம்பவான்களை உள்ளடக்கிய கிரிக்கெட் அணியைக் கொண்டு, உலகின் வேறெந்த அணிகளையும் வெல்லும் தேசமாக வலம் வந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட, மிகச் சிறந்த அணியாக இருந்த இலங்கைக்கு, தற்போது வெற்றி என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. குறைந்தபட்சம், அவர்கள் அந்த கனவையாவது காண்கிறார்களா? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

கடந்த ஆண்டு (2017) இலங்கை கிரிக்கெட் அணி, சாம்பியன்ஸ் டிராபி தவிர்த்து தான் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களிலும் கோப்பையை இழந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியிலும் தோல்வி தான். இதில், சோகம் என்னவெனில், தங்கள் சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை, 3-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. உள்நாடு, வெளிநாடு என பாரபட்சம் இல்லாமல் அடி வாங்கியது இலங்கை.

டெஸ்ட் தொடர்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராகவும், ஜிம்பாப்வேக்கு எதிராகவும் விளையாடி கோப்பையை வென்றது. அதிலும், ஜிம்பாப்வேக்கு எதிராக, சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டியில், 388 எனும் கடினமாக இலக்கை நாக்குத் தள்ளி வென்றது இலங்கை.

டி20 தொடர்களில், இலங்கைக்கு பெருத்த அவமானம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் காத்திருந்தது. அங்கு, இலங்கை தோற்கவில்லை. கோப்பையை தன்வசப்படுத்தியது. ஆனால், தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தங்களுடைய இரண்டாம் தர வீரர்களையே இலங்கையுடன் மோதவிட்டு தோற்றது. இதற்கு இலங்கை அணி, முதல்தர அணிகளுடன் விளையாடி தோற்றே போயிருக்கலாம்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் அந்த அணி 4 கேப்டன்களை மாற்றிவிட்டது என்றால் அவர்களது நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு மட்டும் அவர்கள் விளையாடிய 28 ஒருநாள் போட்டிகளில், 23 போட்டிகளில் தோற்றிருக்கின்றனர். இவையனைத்தும் கடந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் தான்.

ஆனால், இந்தாண்டும் இலங்கை அணியின் விளையாட்டுத் திறனில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. மாறாக, மேலும் மோசமடைந்தே வருகிறது.

நடந்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தோல்வி குறித்து நாம் பேசி வரும் இந்த வேளையில், சத்தமே இல்லாமல் ஒரு முத்தரப்பு தொடர் நடந்து வருகிறது. இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் இத்தொடர் வங்கதேசத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் இலங்கை அணியின் ஆட்டம் எப்படி உள்ளது தெரியுமா? முதல் போட்டியில், ஜிம்பாப்வே உடன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க, அடுத்த போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 163 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்துள்ளது. 321 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை, 157 ரன்களுக்கு சுருண்டு போனது.

தோல்விக்கான காரணங்கள் என்ன?

ஜெயவர்தனே மற்றும் சங்கக்கரா ஓய்வு பெற்றவுடன் தான் இலங்கை அணியின் இந்த சறுக்கல்கள் ஆரம்பமாகின. மேத்யூஸ், சந்திமல், மலிங்கா, உபுல் தரங்கா, திசாரா பெரேரா போன்ற உலகத் தரம் வாய்ந்த மூத்த வீரர்கள் இன்னும் அந்த அணியில் விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும், அவர்களால் வெற்றி எனும் வார்த்தையை மட்டும் உச்சரிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், அந்த அணியினர் வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தை தற்காலிகமாக மறந்து போனதும், எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் இருப்பதால் தான்.

அதென்ன வெற்றிக்கான சூத்திரம்? கிரிக்கெட் விளையாட்டில் மட்டும், நாம் என்னதான் முன்னேற்பாடுகளுடன் பக்காவாக வந்தாலும், களத்தில் அணியின் ‘ஸ்பாட் செயல்பாடே’ வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். இதற்கு முக்கிய காரணிகளாக இருக்க வேண்டியவை,

*நாம் யாராலும் வீழ்த்த முடியாத அணி என்ற ‘நினைப்பு’ (அல்லது) ‘சிறிதளவு மமதை’ மனதில் இருக்க வேண்டும்.

* இந்தப் போட்டியின் முடிவு இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கேப்டன் மனதில் திண்ணமாக இருக்க வேண்டும். அதை அப்படியே அணி வீரர்களுக்கு பரவச் செய்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

* எதிராளி பலமாக இருந்தாலும், பயத்தையும், பதட்டத்தையும் காட்டாமல் விளையாட வேண்டும்.

இந்த மூன்றும் இன்று ஒருசேர அதிகரித்துக் கொண்டிருப்பதால் தான், ஒரு காலத்தில் ‘கத்துக்குட்டி’ அணியாக இருந்த வங்கதேசம், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. ஆனால், இலங்கை இவையனைத்தையும் தொலைத்துவிட்டு தேடி வருகிறது.

திட்டமிடல் என்பது, அந்த அணியிடம் துளி கூட இல்லை. இந்தத் தொடரில் யாரை கேப்டனாக போடலாம் என்பதைத் தான் இலங்கை நிர்வாகம் யோசிக்கிறதே தவிர, அந்தத் தொடருக்கு வீரர்களை எப்படி தயார் செய்வது என்று யோசிப்பதில்லை. இதனால் தான், ஒவ்வொரு முறையும் அவர்கள் தோற்கிறார்கள். இப்போது இந்தியா, தென்னாப்பிரிக்காவில் வாங்கும் அடிக்கும் இதுதான் காரணம். ஒரேயொரு வித்தியாசம், நமக்கு கேப்டன் பிரச்சனை இல்லை.

கேப்டன்களையோ, பயிற்சியாளர்களையோ மாற்றுவதால் எந்த அணியும் உடனடியாக வெற்றிப் பெறாது. நம்பிக்கை, உத்வேகம், கெத்து… இந்த மூண்டும் இருந்தால் தான் இலங்கையால் மீண்டு(ம்) சாதிக்க முடியும்.

×Close
×Close