ரஞ்சி தொடரில் ‘விதர்பா’ அணியின் வெற்றி எதை உணர்த்துகிறது? கிரிக்கெட் பரவலாக்களின் முதல் படியா?

ரஞ்சிப் போட்டிகளின் தலையெழுத்துகள் மாறும். அதன் பிரதிபலிப்பு இந்திய அணியிலும் தெரியும்

டெல்லி அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், விதர்பா அணி, டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்று, முதன் முதலாக ரஞ்சி சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது. 1934ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில், இதுவரை மும்பை அணி மட்டும் 41 முறை சாம்பியன் பட்டம் வென்று, மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், ரஞ்சிக் கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை தான். 1958 முதல் 1973 வரை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி, அந்தச் சாதனையை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒருமுறை மட்டும் தமிழகம் கோப்பையை கைப்பற்றி இருந்தாலும், 9 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மும்பை, தமிழகம், கர்நாடகம், டெல்லி போன்ற அணிகள் தான் இதுவரை ரஞ்சியில்ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. ஆனால், முதன்முறையாக, மஹாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த விதர்பா தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

ரஞ்சித் தொடர் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இறுதிப் போட்டியை நெருங்காத விதர்பா, இந்த முறை சாம்பியன் பட்டத்தையே வென்றுள்ளது, இந்தியாவில் கிரிக்கெட்டை பரவலாக்கும் முயற்சியின் முதல் வெற்றி இது என்றே பார்க்கப்படுகிறது.

அதாவது, மும்பை, தமிழகம், கர்நாடகா, டெல்லி, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் தான் கிரிக்கெட் தொடர்பான வசதிகள் அதிகம் உள்ளன. இதனால், தான் தேசிய அணியாக இருந்தாலும் சரி, ஐபிஎல்லாக இருந்தாலும் சரி, ரஞ்சிப் போட்டிகளாக இருந்தாலும் சரி… சுற்றி சுற்றி இந்த மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தான், ரசிகர்களின் நாயகர்களாக இருந்து வருகிறார்கள். இம்மாநிலங்களின் வீரர்களின் ஆதிக்கமே இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை, ஒவ்வொரு முறையும் நிர்வகித்து வருகிறது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் ஷர்மா, விராட் கோலி என்று இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

இதனால், மற்ற அதிகம் வசதியில்லாத மாநிலங்களில் இருந்து வரும் வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த என்ன வழி என யோசித்த போது, கிரிக்கெட்டை நாடு முழுவதும் கொண்டுச் சேர்க்க, கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இந்த திட்டத்தின் மூலம், வசதியில்லாத பல வீரர்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதன்மூலம், மறைந்து கிடந்த பல திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இன்று, ரஞ்சிக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது விதர்பா. அந்த அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ரஜ்னீஷ் குர்பானி உருவெடுத்துள்ளார். ரஞ்சி தொடரில், தனது பெரிய இன்ஸ்விங்கர்களால் எதிரணிகளை பயமுறுத்தினார். இறுதிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை ஒரு ஹாட்ரிக் சாதனையுடன் கைப்பற்றி, 2-வது இன்னிங்சில் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே குர்பானிதான், ரஞ்சி சாம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகாவுக்கு எதிரான அரையிறுதியில் கடைசியில் அற்புதமாக வீச, 5 ரன்களில் கர்நாடக அணி தோற்றது. அப்போட்டியில் 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டெல்லிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த குர்பானி, ரஞ்சி இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட் பரவலாக்களின் திட்டத்தால், வீரர்கள் பயன் பெறுகின்றனர் என்பதற்கு குர்பானி மிகப்பெரிய சான்று.

இனி, ரஞ்சிப் போட்டிகளின் தலையெழுத்துகள் மாறும். அதன் பிரதிபலிப்பு இந்திய அணியிலும் தெரியும். ராஞ்சியில் இருந்து தோனி வந்தது போல, இனி பல தோனிக்கள் இந்தியாவுக்கு விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சரித்திரம் மாறுகிறது!.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What vidarbas ranji success expose to indian cricket

Next Story
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘நியூ இயர் ரிசல்யூஷன்’ என்னவாக இருக்கும்?Chennai Super Kings Resolution
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express