மற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு!

ஃபார்ம், மெச்சூரிட்டி, அனலைஸிஸ் ஆகிய விஷயங்களில் அஷ்வின் பெஸ்ட் தான். ஆனால், கேப்டன்சி என்பது அவருக்கு புதிது

ANBARASAN GNANAMANI

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், தனது வசீகர சிரிப்பாலும், குழந்தைப் போன்ற பாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா நிச்சயம் இப்போது சற்று நிம்மதியாக இருப்பார்.

ஐபிஎல் ஏலத்தின் போது ப்ரீத்தி ஜிந்தா

ஐபிஎல் ஏலத்தின் போது ப்ரீத்தி ஜிந்தா

இம்முறை சற்று பலமான அணியை கட்டமைத்துள்ளதே ப்ரீத்தியின் மகிழ்ச்சிக்கு காரணம். ரவிச்சந்திரன் அஷ்வின், லோகேஷ் ராகுல், கருண் நாயர், ஆரோன் ஃபின்ச், யுவராஜ் சிங், கிரிஸ் கெயில், ஆண்ட்ரூ டை உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களை வாங்கியுள்ளது பஞ்சாப் அணி. மேலும், பல திறமையான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களையும் ஏலம் எடுத்துள்ளனர்.

ஆனால், மற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு உருவாகியுள்ளது. கேப்டனாக யாரை நியமிப்பது என்பதே அந்த சிக்கல்!.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவரும், இந்திய அணியின் கரண்ட் லீடிங் ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வினை 7.6 கோடிக்கு வாங்கியுள்ளது பஞ்சாப். அஷ்வினை கேப்டனாக நியமிப்பதா? 6.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ச்-ஐ கேப்டனாக நியமிப்பதா? பின்ச் கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். பஞ்சாப் மைந்தன் யுவராஜை கேப்டனாக நியமிப்பதா? அல்லது இதற்கு முன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் மில்லரை நியமிப்பதா? அல்லது புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுலை கேப்டனாக நியமிப்பதா? என ஏகப்பட்ட குழப்பத்தில் உள்ளது பஞ்சாப் அணி.

கெயிலை யாருமே வாங்காத நிலையில், இரண்டாம் நாளில் அதுவும் இறுதிக் கட்டத்தில், அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது பஞ்சாப் அணி. 38 வயதான கெயிலை கேப்டனாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

யுவராஜ் சிங்கை ப்ரீத்தி ஜிந்தா மிகவும் விருப்பப்பட்டு தான் தனது அணிக்கு ஏலத்தில் எடுத்தார். ஏலம் முடிந்த பிறகு கூட, ‘யுவராஜ் மீண்டும் தன் வீட்டிற்கு வந்துவிட்டார். சில வருடங்களாக அவரை வாங்க முடியாமல் தவித்தோம். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ஓப்பனாகவே பேசினார் ப்ரீத்தி. ஆனால், அதற்காக அவரை கேப்டனாக நியமிப்பார்களா? என்றால், கடினம் தான். மோசமான உடற்தகுதி, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடுவது, கடந்த ஐபிஎல் சீசனில் சொதப்பல் என யுவராஜ் மீதான அதிருப்தியே அதிகம். இதனால், யுவராஜை கேப்டனாக நியமிக்க பஞ்சாப் அணி யோசிக்குமே தவிர, செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறலாம்.

டேவிட் மில்லரை பொறுத்தவரை, 2016 ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டவர். அந்தத் தொடரிலேயே அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க, அவருக்கு பதில் முரளி விஜய், மீதி போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, கிளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமித்தார் தலைமை பயிற்சியாளர் வீரேந்திர சேவாக். ஆனால், மேக்ஸ்வெல் இப்போது பஞ்சாப் அணியில் இல்லை. எனவே, டேவிட் மில்லருக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு கிடைப்பது மிக மிக கடினம்.

ரவிச்சந்திர அஷ்வின், இப்போது முதன் முதலாக பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஃபார்ம், மெச்சூரிட்டி, அனலைஸிஸ் ஆகிய விஷயங்களில் அஷ்வின் பெஸ்ட் தான். ஆனால், கேப்டன்சி என்பது அவருக்கு புதிது. உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். இருப்பினும், ஐபிஎல் போன்ற அதிக பதற்றம் வாய்ந்த களத்தை அவர் ஆண்டதில்லை. ஆனால், இதற்கு நம்ம ‘தல’ தோனி சொன்ன பதில் தான் நினைவுக்கு வருகிறது. ‘சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாகும் முன் நானும் ஒரு சாதாரண வீரன் மட்டுமே!’. இதை கருத்தில் கொண்டு பார்க்கையில், அஷ்வினை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், 31 வயதான ஆரோன் ஃபின்ச்சிற்கு கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டதும், புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக பணியாற்றிய அனுபவமும் அவருடைய ப்ளஸ்!. இதற்காக இவரை பஞ்சாப் நிர்வாகம் யோசிக்கலாம்.

‘இல்லை. நாங்க யங் கேப்டனைத் தான் ஃபோகஸ் பண்றோம். ஒரு தரம் வாய்ந்த கேப்டனை உருவாக்கப் போகிறோம். குறைந்தபட்சம் அடுத்த இரு ஆண்டுகளுக்கும் அவரே எங்கள் அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்!’ என்ற நிலைப்பாட்டில் பஞ்சாப் நிர்வாகம் இருந்தால், லோகேஷ் ராகுலுக்கும், கருண் நாயருக்குமே கேப்டனாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதுவே, அந்த அணியின் சரியான தேர்வாகவும் இருக்கக் கூடும்.

25 வயதான லோகேஷ் ராகுல், இந்திய அணியில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய வீரர். டி20க்கு ஏற்ற அதிரடி வீரர். தோனியே இவரை ‘ஒரு முழுமையான கிரிக்கெட்டர்’ என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளது நினைவிருக்கலாம்.

அதேபோல், 26 வயதான கருண் நாயருக்கும் கேப்டன் பதவி கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. ‘இந்திய A’ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இவருக்கு உள்ளது.

லோகேஷ் ராகுல் அல்லது கருண் நாயரை கேப்டனாக நியமிக்கும் பட்சத்தில் பஞ்சாப் அணி நிச்சயம் புத்துணர்ச்சியுடன் வெற்றிகளை குவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close